உள்ளூர் செய்திகள்

மாணவர்களின் ஆரோக்கியத்துக்கு புதிய திட்டம் அறிமுகம்

உடுப்பி: பள்ளி சிறார்களின் உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, உடுப்பி மாவட்ட சுகாதார அதிகாரிகள், புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர்.கர்நாடகாவில் மழை தீவிரமடைந்துள்ளது. தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய்கள் பரவுகின்றன. பள்ளி சிறார்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில், உடுப்பி மாவட்ட சுகாதாரத் துறை, ஆரோக்கிய சனிக்கிழமை என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. பள்ளி சிறார்களுக்கு, மலேரியா, டெங்கு, காய்ச்சல், சளி போன்ற நோய்கள் எப்படி பரவுகின்றன; நோய்கள் வராமல் தற்காத்துக் கொள்வது எப்படி; ஆரோக்கியத்தை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து, ஒவ்வொரு சனிக் கிழமையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இது நல்ல பலனை அளித்துள்ளது.சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஜூன் முதல், ஆரோக்கிய சனிக்கிழமை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. உடுப்பி மாவட்டத்தின், 1,098 அரசு, அரசு நிதியுதவி பெறும், பெறாத தனியார் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. குளிர் காலம், கோடைக்காலம், மழைக்காலத்தில் ஏற்படும் நோய்கள், இதில் இருந்து தப்ப, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அந்தந்த பள்ளிகளின் அருகில் உள்ள, ஆரம்ப சுகாதார மையங்களின், மருத்துவ ஊழியர்கள், சனிக் கிழமைகளில் பள்ளிகளுக்கு சென்று, ஆரோக்கிய பாதுகாப்பு குறித்து, ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு அறிவுரை கூறுவர்.மலேரியா, டெங்கு உட்பட, பல நோய்கள், கொசுக்களாலும், சுகாதாரமின்மையாலும் வருகின்றன. இதை தடுக்க, பள்ளி, வீட்டின் சுற்றுப் பகுதிகளில், தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டு, துாய்மையை பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது. சிறார்களின் உடல் நிலை பாதித்து, பள்ளிக்கு வராவிட்டால் கல்விக்கு இடையூறு ஏற்படுவதுடன், உடல் வளர்ச்சியும் பாதிக்கும். சிறார்களை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள, இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. மழைக்காலம் என்பதால், வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, சிறார்கள் வசிக்கும் பகுதிகளில் பெய்யக்கூடிய மழையின் அளவு, அபாயமாக உள்ள கால்வாய், ஓடைகளை தாண்டக்கூடாது, மாற்று சாலையை பயன்படுத்த வேண்டும். தாண்டி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்