உள்ளூர் செய்திகள்

அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் புலம்பல்

மதுரை: தமிழகத்தில் புதிய அரசு கலைக் கல்லுாரிகளில், ஓராண்டு மாற்றுப்பணிக்கு சென்ற 150 மூத்த இணை, உதவி பேராசிரியர்கள் பழைய கல்லுாரிகளுக்கு திரும்ப முடியாமல் திண்டாடுகின்றனர்.அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விழுப்புரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 20 அரசு கலைக் கல்லுாரிகளை முதல்வர் ஸ்டாலின் 2022 ஜூலையில் துவக்கினார். அந்த ஆண்டே மாணவர் சேர்க்கை துவங்கி வகுப்புகள் நடப்பதற்கு ஏதுவாக பிற அரசு கலைக் கல்லுாரிகளில் பணியாற்றும் சீனியர் இணை, உதவி பேராசிரியர்கள் 150 பேருக்கு ஆக., 1ல் மாற்றுப்பணி வழங்கப்பட்டது.ஆனால் தற்போது 20 புதிய கல்லுாரிகளில் முதல்வர்கள், யு.ஜி.சி., விதிப்படி தேவையான கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனாலும் மாற்றுப்பணி வழங்கப்பட்ட மூத்த பேராசிரியர்களுக்கு மீண்டும் பழைய கல்லுாரிகளுக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதனால் பழைய கல்லுாரிகளில் மாணவர்களுக்கான கற்பித்தல் பணி பாதித்துள்ளது.பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் கூறியதாவது: மாணவர் சேர்க்கையை காரணம் காட்டி ஓராண்டு மாற்றுப்பணி வழங்கினர். இதில் 15 பேர் வரை அரசியல், பணம் சிபாரிசால் பழைய கல்லுாரிகளுக்கு சென்றுவிட்டனர். ஆனால் ஓய்வு பெறும் வயதுள்ள பலர் இன்னும் 100 கிலோ மீட்டர் துாரம் சென்று திரும்பும் நிலை உள்ளது. ஒரே கல்லுாரியில் பணியாற்றும் ஜூனியர் ஆசிரியர்கள் பாக்கியவான்கள். நாங்கள் (சீனியர்) பாவப்பட்டவர்களா. உயர்கல்வி செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்