உள்ளூர் செய்திகள்

டிஸ்லெக்சியா: வழக்கு போட்டவருக்கு கோர்ட் பதில்

அது நோயல்ல; ஒரு குறைபாடே என்பது அப்போது விளங்கும் என்று டில்லி ஐகோர்ட், மனுதாரருக்கு பதில் அளித்துள்ளது.   டில்லி ஐகோர்ட்டில் ஜெயின் என்பவர், டிஸ்லெக்சியா, மூளை வளர்ச்சிக் குறைவு போன்ற நோய்களால் பாதிக்கப் படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க, தகுந்த மருத்துவர்களை மருத்துவமனைகளில் நியமிக்கும்படி மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கோரி ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ஷா தலைமையிலான பெஞ்ச் கூறியதாவது: மனுதாரருக்கு டிஸ்லெக்சியா என்பது என்ன என்று தெரியவில்லை. நீங்கள் வீட்டில் நிச்சயம் விசிடி வைத்திருப்பீர்கள். அதில், தாரே ஜமீன் பர் படத்தைப் பாருங்கள். டிஸ்லெக்சியா என்ன என்று அப்போது உங்களுக்கு விளங்கும். டிஸ்லெக்சியா என்பது நோயல்ல. அதை மூளைக் கோளாறு என்றும் சொல்லக்கூடாது. அடுத்த விசாரணையில் மனுதாரர் நேரில் ஆஜராக வேண் டும். தனிப்பட்ட முறையில் நாங்கள் அவரிடம் டிஸ்லெக்சியா என்றால் என்ன என்பது குறித்து விளக்குகிறோம்.  இவ்வாறு நீதிபதிகள் பெஞ்ச் கூறியது.    டிஸ்லெக்சியா என்பது மறதி நோய் அல்லது கற்றலில் குறைபாடு என்று விளக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், கல்வியில் மந்தமாக இருக்கும். புரிந்து கொள்ளும் தன்மை மிகக் குறைவாகத்தான் இவர்களிடம் இருக்கும். இவர்கள் எண் களை மாற்றியே புரிந்து கொள்வர். அதாவது 42 என்பது 21 ஆக இவர்களுக்குத் தெரியும். இதேபோல எழுத்துக்களையும் தவறாகவே எழுதுவர். கடந்த ஆண்டு அக்டோபரில், டிஸ்லெக்சியா பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து டில்லி அரசு எவ்வித அக்கறையும் எடுக்கவில்லை என்று பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. டில்லி மாநகராட்சியால் 1,800 பள்ளிகளும், டில்லி அரசால் 1,000 பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. இவற்றில், கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வசதியாக எவ்வித ஏற்பாடுகளும் இல்லை என்பதை டில்லி அரசு ஏற்றுக்கொண்டது. மனு விசாரணை முடிவில், டிஸ்லெக்சியா என்ற கற்றலில் குறைபாட்டைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம்; இதற்காக பயிற்சி பெற்ற மருத்துவர்கள் அல்லது சிறப்பு வசதிகள் வைத்து அப்படிப்பட்ட குழந்தைகளை அடையாளம் காணுவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? டில்லியிலுள்ள 2,800 அரசு பள்ளிகளிலும் உள்ள குழந்தைகளின் உடல் நலம் பற்றிய அறிக்கையை மாநகராட்சி தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் தீர்ப்பளித்தது. டில்லி பள்ளிகளில், 1 - 2 சதவீதம் குழந்தைகள் டிஸ்லெக்சியாவால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன; 4 - 5 சதவீதம் குழந்தைகள் வேறு விதமான கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப் பட்டிருக்கின்றன; ஆறு அல்லது ஏழு வயதுக்கு முன்னர் ஒரு குழந்தை டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிவது கடினம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்