ஒரு மாணவர் கூட பாதிக்கப்பட மாட்டார்கள்
இருப்பினும், இந்த பல்கலைக் கழகங்களில் படித்து வரும் எந்த ஒரு மாணவரும் பாதிப்புக்கு உள்ளாக மாட்டார். மாணவர்களின் படிப்பு தொடர்வதற்கும், அவர்கள் பட்டம் பெறுவதற்கும், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். விதிமுறைகளை மீறி செயல்படுவதாக கூறி, நாடுமுழுவதும் உள்ள 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அந்தஸ்து ரத்து செய்யப்படும் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் மட்டும், 17 பல்கலைக் கழகங்கள் இதுபோன்ற நிலைக்கு ஆளாகியுள்ளன. இதனால், பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை எழுந்துள்ளது. இந்நிலையில், நிருபர்களை சந்தித்த மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் அனைத்தும், அதற்குரிய விதிமுறைகளை பின்பற்றி நடக்கின்றனவா என்பது குறித்து ஆராய, மத்திய அரசு தரப்பில் ஒரு கண்காணிப்பு படையை உருவாக்கி, நிலைமையை ஆராய்ந்தோம். அதில், பல்வேறு உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. விதிமுறைகளை பின்பற்றாமல், 44 பல்கலைக் கழகங்கள் நடப்பது தெரியவந்தது.இந்த விவரங்கள் அனைத்தையும், சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்து விட்டோம். இனி நடவடிக்கை எடுப்பது சுப்ரீம்கோர்ட் கையில்தான் உள்ளது. அரசைப் பொறுத்தவரை, விவரங்களை அளித்ததோடு சரி. பல்கலைக் கழகங்களை மூடுவதா, வேண்டாமா என்பது குறித்தெல்லாம் கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும். இருப்பினும், மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுபோல நடக்காது. எந்தவொரு மாணவரும் பாதிக்கப்பட மாட்டார். சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்துக்கு அருகில் உள்ள கல்லூரியில் சேர்க்கப்பட்டு, படிப்பு தொடரவும், பட்டம் பெறுவதற்கும் வேண்டிய அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும்.எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி அளிக்கும் திட்டத்தை கொண்டு வர, தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். இதில் மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு நிதியை பங்கிட்டுக் கொள்வது என்பதெல்லாம் பேசப்பட்டு வருகிறது. பல கல்வி நிலையங்களில், சேர்க்கைக் கட்டணம் அதிக அளவில் இருப்பதாக புகார்கள் உள்ளன. இதை தடுத்து நிறுத்த கடுமையான சட்டங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. கல்லூரிகளை தொடர்ந்து கண்காணிக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனைகள் நடைபெறும். வெளிநாடுகளில் இருப்பது போன்ற ஒழுங்குமுறை சட்டமும் கொண்டு வரப்படவுள்ளன. இவ்வாறு கபில் சிபல் கூறினார். பத்தாம் வகுப்பு தேர்வு கிடையாது : சி.பி.எஸ்.இ., முறையில் படிக்கும் மாணவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டு முதல் 10ம் வகுப்பு தேர்வு கிடையாது. அதேநேரத்தில், இதே முறையை பின் பற்றும்படி, மாநில கல்வி வாரியங்களை வற்புறுத்த மாட்டோம். 10ம் வகுப்பு தேர்வை நடத்துவதா, வேண்டாமா என்பதை மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது : பாடப்புத்தகம் சார்ந்த தேர்வு முறையிலிருந்து நாம் மாற வேண்டும். மாணவர்கள் பெற்றிருக்கும் அறிவுத் திறனின் அடிப்படையில், அவர்களை நாம் பரிசோதிக்க வேண்டும். கல்வியானது குழந்தைகளை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். கல்வி முறையானது மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதாக இருக்க வேண்டும்.பள்ளிக் கல்வி முறையை மாற்றி அமைக்க இதுவே சரியான தருணம். கல்விக்காக அதிக அளவில் முதலீடு செய்யப்பட வேண்டும். அதன்மூலம் நாட்டின் அறிவுசார் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். ஒவ்வொரு குழந்தையையும் கல்வி சென்றடைய வேண்டும். அந்த நோக்கத்தோடு இலவச ஆரம்பக் கல்வியைப் பெறுவது, உரிமையாக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக இலவசமாக மேல்நிலைக் கல்வியை பெறுவதும் கட்டாயமாக்கப்படும்.பள்ளிப்படிப்பை பாதியில் விட்டும் வெளியேறும் குழந்தைகளின் எண்ணிக்கை மத்திய அரசுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.இவ்வாறு கபில்சிபல் கூறினார்.