உள்ளூர் செய்திகள்

நிகர்நிலை பல்கலை அங்கீகாரம் ரத்து ஏன்?

மாணவர்கள் சேர்க்கையில் ஆர்வக்கோளாறாக நடந்து கொண்டதும், உள்கட்டமைப்பு வசதிகளை போதுமான அளவுக்கு செய்யாததுமே, நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதற்கான பின்னணி என்று, கல்வியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத கல்வியாளர் தெரிவித்தது: கல்லூரிகளாக இருந்தபோது, பல்கலைகளுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்ட கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைகளாக தகுதி உயர்வு பெற்றன. ஆனால், காலப்போக்கில், அந்த தரத்தை தக்க வைக்க அப்பல்கலைகள் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, வர்த்தக ரீதியில் கவனம் செலுத்தத் துவங்கின.ஒரு படிப்புக்கான பிரிவில், 60 -120 மாணவர்களை சேர்த்து வந்த கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைகளாகிவிட்ட பின், அதே பிரிவில் 2 ஆயிரம் மாணவர்களை சேர்த்தனர்.ஆறுமாதமோ அல்லது ஓராண்டு இடைவெளியில், அதிகரித்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இந்த பல்கலைகளால் தரத்தை உயர்த்தமுடியவில்லை. உள்கட்டமைப்பு வசதிகளையும் பலமடங்கு உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து வர்த்தக ரீதியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தன.நிகர்நிலைப் பல்கலைகளுக்குள், ஒரு நிறுவனத்துடன் இன்னொரு நிறுவனம் மாணவர் சேர்க்கையில் போட்டி போட்டன. இது, விதிமீறல்களுக்கும், தவறுகள் செய்வதற்கும் வழிவகுத்தது. அத்துடன், இவை ஆரோக்கியமற்ற போட்டிகளாக அமைந்துவிட்டன.நல்ல கல்வி வழங்க வேண்டும் என்ற நாட்டம் இல்லாததை இது வெளிப்படுத்தின. அனுபவம் வாய்ந்த இந்நிகர்நிலைப் பல்கலைகள், அந்த அனுபவத்துக்கு ஏற்ற பொறுப்புகளை கடைபிடிக்கவில்லை.மத்திய அரசின் இந்த முடிவால், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தொடர்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி, தவறு செய்யும் கல்வி நிறுவனங்களை அவ்வப்போது தண்டிக்க வேண்டும்.அப்போது தான், தொடர்ந்து தரத்தை பேண முடியும். தண்டனை வழங்குவது தீர்வல்ல. தவறு செய்யாமல் தடுக்க, மத்திய அரசு முதலிலேயே முயற்சி செய்திருக்க வேண்டும்.அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இப்போதே, இந்நிகர்நிலைப் பல்கலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சேர்க்கைகளை சில கல்வி நிறுவனங்கள் முடித்துவிட்டன. அவர்களுடைய நிலை கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். திருச்சியைச் சேர்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி தரத்துக்கான சமூகத்தின் தலைவர் சுவாமிநாதன் கூறியதாவது: தாமதமாக மேற்கொண்டாலும், இம்முடிவு வரவேற்கத்தக்கத்து. விதிமுறைகளை மீறிய போதெல்லாம், கேட்க யாருமில்லை என்ற மனப்போக்கில் நிகர்நிலைப் பல்கலைகள் செயல்பட்டன. மாணவர் சேர்க்கை, உள்கட்டமைப்பு மற்றும் தரமான ஆசிரியர் நியமனத்துக்கு இந்நிறுவனங்கள் வழிகாண வேண்டும்.இதற்கான அனைத்து விவரங்களை வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட வேண்டும். பல்கலை மானியக்குழுவுக்கும் இது நல்ல பாடம். மத்திய அரசின் இம்முடிவுக்கு காரணமான டாண்டன் கமிட்டியின் அறிக்கையையும் வெளியிட வேண்டும்.இவ்வாறு சுவாமிநாதன் கூறினார். மத்திய அரசு செய்ய வேண்டியது?நிகர்நிலைப் பல்கலைகளின் அங்கீகாரம் ரத்து தொடர்பாக, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:ரத்து செய்யப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் முறையாக இல்லை. எக்ஸ்டென்ஷன் கவுன்டர் மூலம், கல்வியை விற்பனைப் பொருள் போல் ஆக்கிவிட்டனர். தொழில்நுட்பக் கல்வியை, கலைத்துறைக் கல்வி போல் ஆக்கிவிட்டனர். தற்போது படிக்கும் மாணவர்களுக்கு, எந்த சிக்கலும் இல்லை என்று, மத்திய அரசு சாதாரணமாக கூறியிருக்கிறது. ஆனால், அதுபற்றி விரிவாக விளக்கவில்லை. அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டால், நிகர்நிலைப் பல்கலைகள், கல்லூரிகளாகி விடும். அப்போது, அவை இன்னொரு பல்கலையின் கீழ் செயல்படும். இதனால், மாறக்கூடிய பாடத்திட்டம், செயல்முறை பாடத்திட்டம், கல்விக்கட்டணம் பற்றி, மத்திய அரசு விரிவாக விளக்க வேண்டும். இல்லாவிட்டால், மாணவர்கள் ஏமாறும் வாய்ப்புள்ளது.அண்ணா பல்கலையின் கீழ் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 வில் 55 சதவீதம் மதிப்பெண்கள் வேண்டும். நிகர்நிலைப் பல்கலைகள் பல, இதற்கும் குறைவாக மதிப்பெண் பெற்ற, வெளிமாநில மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கியுள்ளது. அப்படியானால், அங்கீகாரம் ரத்து செய்தபின், அம்மாணவர்களுக்கு அண்ணா பல்கலையின் சான்றிதழ் வழங்கப்படுமா? தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான மறுதேர்வை, ரத்து செய்யப்பட்ட நிகர்நிலைப் பல்கலைகள் மீண்டும் நடத்திக் கொள்ள முடியுமா?பாடப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையை விட, அதிகமாக இருந்தால் என்ன செய்வது? இவ்வாறு ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்