உள்ளூர் செய்திகள்

பிரதமரிடம் முறையிட நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் முடிவு

நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து குறித்து மத்திய அரசின் முடிவால், பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 17 நிகர்நிலைப் பல்கலைகளின் நிர்வாகிகள், வேந்தர்கள் மற்றும் துணைவேந்தர்கள், நேற்று (ஜன. 20ம் தேதி) சென்னையில் கூடி அவசர ஆலோசனை நடத்தினர். இரண்டரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக்குப் பின், எம்.ஜி.ஆர்., நிகர்நிலைப் பல்கலையின் துணைவேந்தர் பத்மநாபன், நிருபர்களிடம் கூறியதாவது: நிகர்நிலைப் பல்கலைகள் குறித்த, மத்திய அரசின் திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன், நாட்டில் உள்ள நிகர்நிலைப் பல்கலைகளின் தரம் குறித்து ஆய்வுசெய்ய, பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,), ஏழு முதல் 15 பேர் கொண்ட கல்வியாளர்கள் குழுவையும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்,  பி.என்.டாண்டன் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவையும் அமைத்தது. இவற்றில், பி.என்.டாண்டன் குழுவின் ஆய்வு அறிக்கையை மட்டும் மத்திய அரசு கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது சரியல்ல. பல்கலைக்கழக மானியக்குழுவின் கருத்துக்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வேண்டும். மேலும், டாண்டன் குழுவின் அறிக்கையின் தகவல்களை எங்களுக்கு அளிக்க வேண்டும். நிகர்நிலைப் பல்கலைகளின் தரம் குறித்து, கல்வியாளர்கள், சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். அதில் தெரியவரும் குறைகளை சரிசெய்துக்கொள்ள  போதிய கால அவகாசம் தர வேண்டும். தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 17 நிகர்நிலைப் பல்கலைகளின் அங்கீகாரம் ரத்து என்ற நிலையால், இவற்றில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள், ஆயிரக்கணக்கான பணியாளர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளோம். நிகர்நிலைப் பல்கலைகளின் நிர்வாகம் அரசுடன் பேசி, இப்பிரச்னையில் சுமுக தீர்வு ஏற்பட முயற்சித்து வருகிறது. எங்கள் முயற்சி வெற்றிபெற மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை கைவிட்டு, உடனடியாக வகுப்புகளுக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு பத்மநாபன் கூறினார். நிகர்நிலைப் பல்கலை நிர்வாகிகளின் ஆலோசனையின்போது, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்