கவனச்சிதறல் ஏற்படுத்தும் மொபைல்போன்: மாணவர்களுக்கு அறிவுரை
சேலம்: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியருக்கு, வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அதில் கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்து பேசியதாவது: மாணவ, மாணவியருக்கு வாழ்க்கை கல்வி, வகுப்பறை சுவர்களை தாண்டி அதிகளவில் நிறைந்துள்ளது. கல்வியை உரிய நேரத்தில் வழங்கும் நோக்கில், வாழ்க்கை வழிகாட்டி நடத்தப்படுகிறது. இன்றைய நவீன உலகில் பல்வேறு மின்னணு சாதனங்கள், நமக்கு பேருதவியாக உள்ளது. அதை சரியாக, முறையாக பயன்படுத்தாவிட்டால், கவனச்சிதறல்கள் ஏற்படும். அதனால் மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தவிர்த்து கவனச்சிதறலின்றி கல்வி கற்பதில் முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். அரசு அலுவலர்கள் உள்பட முக்கிய ஆய்வு கூட்டங்கள் நடக்கும் இந்த கூட்டரங்கில் மாணவ, மாணவியரை அழைத்து இந்நிகழ்ச்சி நடத்துவதற்கான காரணம், எதிர்காலத்தில் நீங்களும் இதுபோன்று உயர் பொறுப்புக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கான நல் வாய்ப்பாக இது அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பல்வேறு துறை வல்லுனர்கள், உயர்கல்வி நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வுக்கு தயாராவது எப்படி, அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.