பள்ளிகளில் நிலவேம்பு கசாயம்: தலைமையாசிரியர்கள் வலியுறுத்தல்
உடுமலை: பள்ளிகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கையாக, மாணவர்களுக்கு நிலவேம்பும் கசாயம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை சுற்றுப்பகுதியில், பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நோய்த்தொற்றுகளுக்கும் அதிக வாய்ப்பு உள்ளது.குறிப்பாக எதிர்ப்புசக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள், விரைவில் பாதிக்கப்படுவர். நோய்தடுப்பு நடவடிக்கையாக, கிராமங்களில் கொசுப்புழு ஒழிப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இருப்பினும், குழந்தைகளுக்கு உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில், சிறப்பு நடவடிக்கை தேவையாக உள்ளது. பள்ளிசெல்லும் மாணவர்களுக்கு, நிலவேம்பு கசாயம் வழங்கும் நடைமுறை தற்போது இல்லை.சில பள்ளிகளில், ஆசிரியர்களின் முயற்சியால் மட்டுமே வழங்கப்படுகிறது. நிலவேம்பு கசாயம் வழங்குவது, மாணவர்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையிலும் இருந்தது. இதனால் அனைத்து பள்ளிகளிலுமே, முன்பு இருந்த நடைமுறையின்படி, நிலவேம்பு நீர் மாணவர்களுக்கு வழங்குவதற்கு, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:ஒரு சில பள்ளிகளில், நிலவேம்பு கசாயம் வழங்குகிறோம். ஆனால் அது மட்டுமே நோய்த்தடுப்பாக நினைத்து, பெற்றோர் அலட்சியமாக இருக்கக்கூடாது. தண்ணீரை காய்ச்சிக்குடிப்பது, சுற்றுப்பகுதியில் கொசுப்புழு உற்பத்தி இல்லாமல் சுத்தமாக பராமரிப்பது போன்ற நடவடிக்கைகளையும், பின்பற்ற அறிவுறுத்துகிறோம். நிலவேம்பு நீர் அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு வழங்கினால், கூடுதல் நன்மைதான்.இவ்வாறு கூறினர்.