குழந்தை தொழிலாளர் தடை சட்டம் செயல்படுகிறதா?
நாட்டில் மொத்தம் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. இவர்களின் நல்வாழ்வுக்காக, குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்கு முறைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. சட்டம், முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதுதான் இப்போதைய கேள்வி. இதுவரை அச்சட்டத்தின் கீழ் பதிவாகி தண்டனை பெற்ற வழக்குகளைப் பார்க்கும் போது இந்தக் கேள்வி எழத்தான் செய்யும். கடந்த 2007லிருந்து 2009க்குள் மத்திய தொழிலாளர் கண்காணிப்பாளர்கள், இச்சட்டத்தை மீறியதாக ஐயாயிரத்து 392 சம்பவங்களை கண்டுபிடித்துள்ளனர். ஆனால், அரசுத் தரப்பில் ஆறு வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலும், மூன்றில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதேபோல், 2006-07ல் மொத்தம் இரண்டாயிரத்து 363 சம்பவங்கள் கண்டறியப்பட்டாலும், ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1997 லிருந்து 2005 வரை மொத்தம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் சட்டமீறல்கள் கண்டறியப்பட்டுள் ளன. இவற்றில், 70 ஆயிரத்து 922 சம்பவங்கள் ஆந்திராவில் நடந்துள்ளன. இவற்றில், மொத்தம் 58 ஆயிரத்து 962 வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. இவற்றிலும், 21 ஆயிரத்து 436 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டன. பெரும்பாலான வழக்குகளில் வேலை கொடுப்போர், குற்றத்துக்குரிய தண்டனையாக ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்திவிட்டு தப்பித்து விடுகின்றனர். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலையில் வைத்திருந்தால் அபராதமாக 20 ஆயிரம் ரூபாய் செலுத்தப் படுகின்றது. இதில், வெறும் ஐயாயிரம் ரூபாய் மட்டுமே, பாதிக்கப் பட்ட குழந்தையின் நலனுக்காக கொடுக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் 1983ல் அபராதமாக வசூலிக்கப்படும் தொகை முழுவதும் பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனுக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தும் நடைமுறையில் அதற்கு மாறாகத்தான் நிகழ்கிறது. இப்படிச் சட்டம் இருந்தும் அது குழந்தைத் தொழிலாளர்களைக் காப்பாற்றாவிடில், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை கொள்கின்றனர்.