எட்டு மாணவர்களுடன் செயல்படும் அரசு பள்ளி
பந்தலுார்: பந்தலுார் அருகே எட்டு மாணவர்களுடன் செயல்படும் அரசு பள்ளியை மேம்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.பந்தலுார் அருகே போத்துக்கொல்லி பகுதியில் கடந்த, 1976 ஆம் ஆண்டு, அரசு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆரம்ப பள்ளி செயல்பட ஆரம்பித்தது. போத்துக்கொல்லி, மங்கரை, கையுன்னி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.இதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் தொடர்ச்சியாக கட்டப்பட்டதால், இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியது. அரசு கல்வித்துறை அதிகாரிகள் சுட்டிகாட்டி வந்தனர்.தற்போது, இந்த பள்ளியில், 8 பழங்குடியினர் மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். பள்ளியில் ஒரே ஒரு தலைமை ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில், அவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தற்போது தொகுப்பூதிய அடிப்படையில் ஒரு ஆசிரியர் மாணவருக்கு கல்வி போதித்து வருகிறார். பெற்றோர் கூறுகையில், கூடலுார் கல்வி மாவட்டத்தில், இந்த ஒரு பள்ளி மட்டுமே ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனை மூடாமல் செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.