அரசு பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
புதுச்சேரி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி 3 மையங்களில் நேற்று துவங்கியது.புதுச்சேரி கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளில் பயிலும் 10ம் வகுப்பு மாணவ மாணவிகள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் அந்தந்த பாடத்தில் அனுபவமிக்க தலைமை ஆசிரியர்களை கொண்டு, கற்றல் பொருள் கையேடு 5 பாடங்களுக்கும் உருவாக்கப்பட்டு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக கற்றல் பொருள் கையேட்டினை பயன்படுத்தி, எதிர்வரும் பத்தாம் வகுப்பு தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை விளக்கும் விதமாக, கற்றல் பொருள் கையேட்டினை தயார் செய்த தலைமை ஆசிரியர்கள் துணையுடன், அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி, நேற்று துவங்கி நாளை 11ம் தேதி வரை, லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையம், கல்வித்துறை வளாக மாநில பயிற்சி மையம் மற்றும் முதலியார்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடக்கிறது.நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி கல்வி துணை இயக்குநர் (பெண் கல்வி) சிவராமரெட்டி, ஆசிரியர்கள் பார்த்தசாரதி, பாலசுப்ரமணியன், அன்பரசன் ஆகியோர் செய்திருந்தனர். வழிகாட்டி நிகழ்ச்சியில், 10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எளிமை யாக எதிர்கொள்வது, தேர்வு பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.