நேதாஜி இல்லையேல் சுதந்திரம் இல்லை: கவர்னர்
சென்னை: காந்தி தலைமையிலான ஒத்துழையாமை இயக்கத்தை விட, பிரிட்டிஷ் படையில் இருந்த இந்திய ராணுவ வீரர்களால் தான், சுதந்திரம் கிடைத்தது. நேதாஜி இல்லாவிட்டால், நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என கவர்னர் ரவி கூறினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின், 127வது பிறந்த நாள் விழா, சென்னை அண்ணா பல்கலையில் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்திய தேசிய ராணுவத்தில் முதல் வரிசை வீரர்களாக இருந்த, சென்னையை சேர்ந்த நாகைய்யன் மற்றும் லட்சுமி கிருஷ்ணன் உள்ளிட்ட தியாகிகள் பங்கேற்றனர். தனி நாடுவிழாவில் கவர்னர் ரவி பேசியதாவது:நேதாஜியை நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை; 70 ஆண்டுகளுக்கு முன்னரே, அவர் பெண்களை ராணுவத்தில் முன்னிலைப்படுத்தினார். அவர் சிறந்த தொலைநோக்கு எண்ணம் உடையவர்.நேதாஜி குறித்து படிக்கும் போது, அவர் என்ன செய்தார் என்று பார்க்கும் போது, அவரது பங்களிப்பு மட்டும் இல்லாமல் இருந்தால், இந்தியாவுக்கு, 1947ல் சுதந்திரம் கிடைத்திருக்காது.இரண்டாம் உலக போருக்கு பின், 1942க்கு பின், காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் பெரிதாக செயல்படவில்லை. நமக்குள்ளே நாம் சண்டையிடுவதில் பிசியாக இருந்தோம். முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்று, ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக் சண்டையிட்டது. அதனால், நாம் பிரிவினையை சந்தித்தோம்.இதை பார்த்து, பிரிட்டிஷார் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் வெளியேறுவதற்கு, எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. இந்த நிலை நீடித்திருந்தால், இன்னும் நீண்ட காலம் பிரிட்டிஷார் இந்திய மண்ணில் இருந்திருக்க முடியும்.ஆனால், ஆசாதி இந்தியா என்ற பெயரில், வெளியில் இருந்து சுதந்திர இந்தியாவை அறிவித்த, சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவம், ஆங்காங்கே பிரிட்டிஷாருடன் போரிட்டது.பிரிட்டிஷாரின் பல முக்கிய பகுதிகளை, இந்திய தேசிய ராணுவம் கைப்பற்றியது. அதனால், பிரிட்டிஷாருக்கு நெருக்கடி ஏற்பட்டது. பல வெளிநாடுகள், நேதாஜியின் ராணுவத்தை அங்கீகரித்தன.இந்த முன்னேற்றம், நேதாஜியின் தலைமையிலான ராணுவத்துக்கு மட்டுமின்றி, பிரிட்டிஷ் படையின் இந்திய வீரர்களுக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியது. கடந்த, 1945 செப்டம்பரில் இந்திய தேசிய ராணுவம் கலைக்கப்பட்டது. ஆனால், ஆறு மாத இடைவெளியில், 1946ல் பிரிட்டிஷ் படையில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள், பிரிட்டிஷாருக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். 1946 பிப்., 18ல் கடற்படையில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள், பிரிட்டிஷாரின், 26 போர் கப்பல்களை சிறைபிடித்து, தளவாடங்களை கைப்பற்றினர்.இதனால், இந்திய பெருங்கடலில் நின்ற, பிரிட்டிஷ் படை ஸ்தம்பித்தது; பிரிட்டிஷார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில், இந்திய ராணுவ விமானப் படையில் இருந்தவர்களும் தாக்குதல் நடத்தினர்.எங்கிருந்து அவர்களுக்கு இந்த உத்வேகம் கிடைத்தது என்றால், அவர்களில் பெரும்பாலானவர்கள், நேதாஜியின் ராணுவத்திற்கு ஆதரவாக போரில் ஈடுபட்டவர்கள். இதற்கு, இந்திய தேசிய ராணுவத்தை தலைமையேற்று நடத்திய நேதாஜியே காரணம்.இதை தொடர்ந்து, மற்ற பாதுகாப்பு படைகளில் இருந்த இந்தியர்களும் எதிர்க்க துவங்கினர். இதன் பின்னரே, பிரிட்டிஷார், இந்தியாவில் இருப்பது இனி பாதுகாப்பில்லாதது என்று உணர்ந்தனர்.இனி பிரிட்டிஷ் படையில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் பாதுகாப்பில், நாம் இருப்பது பாதுகாப்பானதல்ல என்பதையும் உணர்ந்தனர். அவர்கள் நமக்கு எதிராக, துப்பாக்கி ஏந்தி விட்டதை அறிந்தனர்.இதையடுத்து தான், அச்சத்துடன் மிக வேகமாக முடிவெடுத்து, இந்தியாவை விட்டு வெளியேற போவதாக, 1946 மார்ச்சிலேயே பிரிட்டிஷார் அறிவித்தனர். அதற்கு பின், முழுமையாக வெளியே 15 மாதங்கள் எடுத்து கொண்டனர்.அதன்பின், யாரிடம் நாட்டை ஒப்படைப்பது என்று ஆலோசித்து, அரசியலமைப்பு குழு அமைத்து, சட்டம் இயற்றினர். இந்த குழுவின் தலைமையில், சுதந்திரம் பெறப்பட்டது. இதற்கு பிரிட்டிஷ் படையில் இருந்து, அவர்களையே எதிர்த்த ராணுவ வீரர்களே காரணம். இதற்கான உத்வேகம் நேதாஜியிடம் இருந்து தான் கிடைத்தது.கடந்த, 1950ம் ஆண்டில், கோல்கட்டாவுக்கு வந்த, பிரிட்டன் முன்னாள் பிரதமர் கிளமண்ட் அட்லியிடம், அம்மாநில கவர்னராக இருந்த முகர்ஜி, 1942க்கு பின் பிரிட்டிஷ் அரசுக்கு, எந்த பெரிய நெருக்கடியும் இல்லாத நிலையில், இந்தியாவை விட்டு வெளியேற காரணம் என்ன? என்று கேட்டார்.இந்திய தேசிய காங்கிரசின் ஒத்துழையாமை இயக்கம் தான் காரணமா என்றும் கேட்டார். அதற்கு அட்லி, அது காரணமல்ல. இந்திய கடற்படையும், விமானப் படையும் எங்களுக்கு எதிராக திரும்பியதால் தான், இனி இந்தியாவில் பாதுகாப்பில்லை என்பதை உணர்ந்தோம் என்றார்.நான் இந்திய உளவு துறையில் நீண்ட காலம் பணியாற்றினேன். அப்போது, பிரிட்டிஷ் கால ஆவணங்களை எல்லாம் பார்த்தேன். 1946 பிப்ரவரி மாதம், இந்தியாவில் இருந்து, இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட அறிக்கைகளை பார்த்தேன்.அதில், ஒவ்வொரு நாளும் இங்கு பாதுகாப்பில்லை. இங்கு என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். ராணுவத்தில் உள்ள இந்தியர்களை மட்டுமின்றி, போலீசில் உள்ளவர்களையும் நாம் நம்ப முடியாது என்று கூறப்பட்டு இருப்பதை பார்த்தேன்.இதனால் தான், அவர்கள் மிக விரைவாக சுதந்திரம் கொடுத்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், இந்திய ராணுவத்தினருக்கு உத்வேகம் அளித்த, நேதாஜியை நாம் பெருமைப்படுத்த வேண்டும். இவ்வளவு பங்களிப்புள்ள நேதாஜிக்கு, சுதந்திர போராட்டத்தில், மிகவும் விளிம்பு நிலை வரலாறு கொடுத்திருப்பது நியாயமல்ல. இவ்வாறு கவர்னர் பேசினார்.