முன்ஊதிய உயர்வு: வருவாய் அலுவலர்கள் வலியுறுத்தல்
மதுரை: கணக்கு தேர்வு பாகம் 1ல் தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜெயகணேஷ் வலியுறுத்தியுள்ளார்.வருவாய் நிர்வாக முதன்மை செயலாளருக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: வருவாய்த் துறையில் பணியமர்த்தப்படும் இளநிலை வருவாய் ஆய்வாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வி.ஏ.ஓ.,க்கள் ஆகியோர் முதுநிலை வருவாய் ஆய்வாளராகும்போது, சார்நிலை அலுவலருக்கான கணக்கு தேர்வு பாகம் 1ல் தேர்ச்சி பெற்றால் ஒரு முன் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது.10.3.2020க்கு முன் கணக்கு தேர்வு பாகம் 1ல் தேர்ச்சி பெற்றிருப்பின், அதை உறுதி செய்து முன் ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அரசு கடிதம் அனுப்பியிருந்தது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் ஊதியபட்டியலை ஏற்று ஊதிய உயர்வு வழங்கி வந்தனர்.ஆனால் மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், ஈரோடு, விழுப்புரம், செங்கல்பட்டு உட்பட சில மாவட்டங்களில் தகுதி பெற்ற பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க சம்பள கணக்கு அலுவலகம் மற்றும் சார்நிலை கருவூல அலுவலகங்கள் ஏற்க மறுக்கின்றன.பணியாளர் பெயரில் தனி ஆணையை பட்டியலுடன் சமர்ப்பிக்கும்படி வலியுறுத்துகின்றன. இதனால் பல தகுதியுள்ள அலுவலர்கள் முன்ஊதிய உயர்வு பெற இயலவில்லை. இதற்கு அரசை வலியுறுத்தி மாநிலம் மழுவதும் பிப்.26ல் மாலை 5:45 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.