உள்ளூர் செய்திகள்

உத்தரகண்டில் கலக்கும் வேலையில்லா பட்டதாரி!

உத்தரகண்ட்: உத்தரகண்டின் தெஹ்ரி கர்வால் தொகுதி, பாரம்பரியமாக பா.ஜ.,வின் கோட்டையாக உள்ளது. இங்கு, தொடர்ந்து மூன்று முறை வென்ற ராணி என்றழைக்கப்படும் மாலா ராஜ்ய லட்சுமி ஷா, பா.ஜ., சார்பில் நான்காவது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு, சுயேச்சையாக போட்டியிடும், 26 வயதாகும் வேலையில்லா பட்டதாரி இளைஞர், கடும் சவாலாக உள்ளார்.உத்தர பிரதேசத்தில் இருந்து பிரித்து, 2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது உத்தரகண்ட். தற்போது தெஹ்ரி கர்வால் லோக்சபா தொகுதி, முன்னர் டேராடூன் தொகுதியாக இருந்தது. அங்கு, 1989ல் இருந்து பா.ஜ., தொடர்ந்து வென்று வருகிறது. இடையில், 2009ல் மட்டும் பா.ஜ., தோல்வி அடைந்தது.தற்போதைய எம்.பி.,யான மாலா ராஜ்ய லட்சுமி ஷா, தொடர்ந்து மூன்று முறை வென்றவர். தெஹ்ரி அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரை ராணி என்றே இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.பெரும் சவால்ஆனால், இந்த முறை அவருக்கு பெரும் சவாலாக உருவாகியுள்ளார், 26 வயதாகும் பாபி பன்வர் என்ற இளைஞர். பெரிய பின்புலம் இல்லாத இவர், உத்தரண்ட் வேலையில்லாதோர் சங்கத்தை துவக்கினார். லோக்சபா தேர்தலில், தெஹ்ரி கர்வால் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.வேறு வேலை இல்லாததால், பொழுதுபோக்குவதற்காக அவர் போட்டியிடுவதாக, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் நினைத்தன. ஆனால், அவருக்கு திடீரென பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு கிடைத்து, தற்போது பிரபலமாகிவிட்டார்.அவருடைய பிரசாரத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. பண பலம், அதிகார பலம் இல்லாத அவர், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பெரும் போட்டியாக மாறியுள்ளார்.சமூக வலைதளங்களில் அவருக்காக பலர் பிரசாரம் செய்து வருகின்றனர். அவருக்காக தனியாக பாடல்கள் கூட வெளியிடப்பட்டுள்ளன.உத்தரகண்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில், நான்கு முக்கிய அரசு பணிகளுக்கான தேர்வுகளில், கேள்வித்தாள்கள் முன்னதாகவே வெளியாகி, அவை ரத்து செய்யப்பட்டன. இதனால், இளைஞர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.தடியடிகடந்தாண்டு பிப்., ரத்து செய்யப்பட்ட அரசு தேர்வின் முதலாண்டை அனுசரித்து, சமீபத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இது போன்ற இளைஞர்கள், வேலை கிடைக்காதோர், தற்போது பாபி பன்வருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர்.இந்த தேர்தலில், பா.ஜ.,வின் தோல்வி உறுதியாகிவிட்டது. அதனால், பா.ஜ.,வின் பினாமியாக இவர் நிறுத்தப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கிடையே பல சிறு கட்சிகள், பன்வருக்கு ஆதரவு தெரிவித்து, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வேலையில்லா பட்டதாரி, பார்லிமென்டுக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக மக்கள் பேசுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்