அங்கன்வாடி குழந்தைகளுக்கான உணவு தரம் குறைவு
பெங்களூரு: அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறைவாக உள்ளது, என, கர்நாடக மாநில சட்டப் பணிகள் ஆணைய செயலர் ரகுநாத் தெரிவித்தார்.பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:கர்நாடகாவில் அங்கன்வாடிகளில் பாக்கெட்டுகளில் வழங்கப்படும் சாம்பார் சாதம் தவிர, கிச்சடி, உப்புமா உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மிகவும் தரமற்றவையாக உள்ளன. அங்கன்வாடிகளுக்கு சென்று உணவு சாப்பிட முயன்றபோது, மோசமாக இருப்பது தெரிந்தது. அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.அங்கன்வாடிகள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்கள் விடுதிகள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று, அரசால் வழங்கப்படும் உணவு பொருட்களின் தரத்தை சோதனை செய்து வருகிறோம்.கர்நாடகாவில் உள்ள அங்கன்வாடிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. குடிநீர், உட்கார சரியான இடம் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.சமீபத்தில் பெங்களூரின் சர்பண்டேபாளையா, ஹரி காலனி, யாரப் நகரில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தோம். இங்கு குழந்தைகள் விளையாட அரசு வழங்கும் பொம்மைகளை, குழந்தைகள் பயன்படுத்துவதில்லை. விதிகளின்படி, மேற்பார்வையாளர்கள் வாரத்திற்கு இரண்டு முறையாவது நேரில் சென்று சரிபார்க்க வேண்டும்.பெங்களூரு நகரம் மட்டுமின்றி, மாநிலத்தின் பெரும்பாலான அங்கன்வாடிகளிலும் இதே நிலை தான் உள்ளது. அங்கன்வாடிகளை பராமரிக்க, அரசு போதிய நிதி அளித்தாலும், அவை முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. அதிகாரிகள் மத்தியில், எந்த செயல் திட்டமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.