திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும்
கோவை: உலகத் திருக்குறள் கூட்டமைப்பு கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட செயற்குழுக் கூட்டம் தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, உலகத் திருக்குறள் கூட்டமைப்பு துணைப் பொதுச்செயலாளர் இளையராஜா தலைமை வகித்தார். கூட்டமைப்புத் தலைவர் ஞானமூர்த்தி சிறப்புரை ஆற்றினார்.இந்த கூட்டத்தில், திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற போது, தமிழில் உள்ள இலக்கியங்களைச் சுட்டிக்காட்டி, தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக்கொண்டார், இதற்கு உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.திருக்குறளைத் தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும், செம்மொழித் தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்கவேண்டும் என்றும், திருக்குறள் வாழ்வியல் நெறிகளை எளியமுறையில் பரப்பிட பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், பொதுக்கூட்டங்கள், பண்பாட்டு விழாக்கள், கலைநிகழ்ச்சிகள் நடத்துவது உள்ளிட்ட, 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.