படைவீரர் குழந்தைகளுக்கு இலவச தொழிற்பயிற்சிகள்
திருப்பூர்: முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு நான் முதல்வன் திட்டம் மூலம் இலவச பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு, நான் முதல்வன் திட்டம் மூலம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் பல்வேறு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், 18 வயது முதல் 35 வயது நிரம்பியவர்கள் பயிற்சியில் இணையலாம். 5ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.ஒயர்மேன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், எலக்ட்ரீஷியன், டெய்லரிங், கார்மென்ட் செக்கர், எம்ப்ராய்டரி மெஷின் ஆபரேட்டர், பிளம்பர் உள்பட ஏராளமான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், இப்பயிற்சியில் இணைந்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 0421 2971127 என்ற எண்ணில் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.