பணியிடங்களை அதிகரிக்க டாக்டர்கள் வலியுறுத்தல்
சென்னை: அரசு டாக்டர்கள், நர்ஸ்கள் பணியிடங்களை, இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என அரசு டாக்டர்களுக்கான சட்டப் போராட்டக்குழு வலியுறுத்தி உள்ளது.அதன் தலைவர் பெருமாள் பிள்ளை வெளியிட்ட அறிக்கை:தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சியில், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த, பல்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிடுகிறது. ஆனால், டாக்டர்கள் நலனுக்கான அறிவிப்பு இல்லை. அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஆனால், பழைய எண்ணிக்கையில் தான், டாக்டர்கள், நர்ஸ்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். தற்போது, 20,000க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் உள்ளனர். அப்பணியிடங்களை, 40,000க்கும் மேல் அதிகரிக்க வேண்டும்.அப்போது தான், டாக்டர்கள் பணிச்சுமை இல்லாமல், மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும். மற்ற மாநிலங்களில் வழங்குவதை விட, தமிழகத்தில் அரசு டாக்டர்களுக்கு, 40,000 ரூபாய் வரை குறைவாக ஊதியம் வழங்கப்படுகிறது.எனவே, மானிய கோரிக்கையில், அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள் பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் அறிவிப்பை, மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.