கேரள சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி
ஊட்டி: கேரள மாநிலம் மலப்புரம் எம்.சி.டி., சட்டக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, ஊட்டியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவிற்கு வருகை புரிந்தனர்.ஊட்டியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு நீதிமன்றம் நடைமுறைகள் குறித்து விவரிக்கப்பட்டது. மேலும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து, நீலகிரி மாவட்ட சட்ட பணிகள் அணிக்குழு செயலாளர் நீதிபதி பாலமுருகன் விரிவாக எடுத்துரைத்தார்.நேற்று கள ஆய்வில், மாணவர்கள் ஊட்டி தமிழக மாளிகை, தோடர் மந்து பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடப்பட்டதுடன், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.நீதிபதி பாலமுருகன் கூறுகையில், “வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணை குழுவிலும் பயிற்சி மேற்கொண்டு செல்வது நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது”, என்றார்.