வள்ளியம்மை கல்லுாரியில் தமிழ் இலக்கிய கருத்தரங்கம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வள்ளியம்மை மகளிர் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.அரகண்டநல்லுார் வள்ளியம்மை மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், பன்முகப் பார்வையில் தமிழ் இலக்கியம் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம், தாளாளர் பூபதி தலைமையில் நடந்தது. கல்லுாரி முதல்வர் தென்னரசி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ரீனா வரவேற்றார்.புதுச்சேரி தாகூர் அரசு கலைக்கல்லுாரி இணை பேராசிரியர் விஜயராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வளர்ந்து வரும் நவீன இலக்கிய போக்குகள், இலக்கியத்தை எவ்வாறு அணுக வேண்டும் என விளக்க உரையாற்றினார்.விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரி இணை பேராசிரியர் குணசேகரன் பங்கேற்று, தமிழ் இலக்கிய ஆய்வு பரப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். கருத்தரங்கில் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர். தமிழ்த்துறை பேராசிரியர் மான்விழி தொகுத்து வழங்கினார். உதவி பேராசிரியர் சுபா நன்றி கூறினார்.