வரலாற்று நிகழ்வுகளை அறிய கண்காட்சியகம் அமைப்பு
சென்னை: தமிழக ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை சார்பில், சீரமைக்கப்பட்ட கட்டடம் திறப்பு; ஆவணங்களை ஜப்பானிய திசு முறையில் பாதுகாக்கும் முறை துவக்கம்; புதிதாக அமைக்கப்பட்ட ஆவண கண்காட்சியகம் திறப்பு என, முப்பெரும் விழா, சென்னை, எழும்பூரில் நேற்று நடந்தது.தமிழக துணை முதல்வர் உதயநிதி, 20.15 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்ட கட்டடம், ஆவண கண்காட்சியகம் ஆகியவற்றை திறந்து வைத்து, ஜப்பானிய திசு முறையில் ஆவணங்களை பாதுகாக்கும் முறையை துவக்கி வைத்தார்.கண்காட்சியில், 1796ல் மைசூரு மாகாணத்திற்கு, திப்பு சுல்தான் வந்தது; 1799ல் வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாரில் துாக்கில் இடப்பட்ட வரலாறு; அவரை துாக்குமேடைக்கு அழைத்து சென்ற போது, அவர் கம்பீரத்துடன் நடந்து சென்றதாக, பிரிட்டிஷாரே பதிவு செய்த ஆவணங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.சுப்பிரமணிய பாரதி சிறையில் அடைக்கப்பட்ட பின், 1918ல் விடுவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு, தன் சொந்த ஊரான கடையம் அல்லது பாபநாசத்தில் வசிப்பதற்கும், அதே போல், அவர் வெளியிடும் அனைத்து கட்டுரைகளும், இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகளில் ஒருவருக்கு காட்டப்பட்டு, ஒப்புதல் வழங்கிய பின்பே வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என்பது உட்பட, பல்வேறு தகவல்கள் தொடர்பான அரசாணை உள்ளிட்ட ஆவணங்களும் கண்காட்சியில், பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.இவற்றை, அலுவலக பணி நாட்களில், காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை, பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.