போட்டி தேர்வர்களுக்கு வயது வரம்பில் தளர்வு?
சென்னை: போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போருக்கு, வயது வரம்பில் ஐந்தாண்டு தளர்வு வழங்குவது குறித்து, எஸ்.எஸ்.சி., ஆலோசித்து வருகிறது.மத்திய அரசு அலுவலகங்களுக்கான பணியாளர்களை, எஸ்.எஸ்.சி., என்ற மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்கிறது. தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால், சரியான சுழற்சி முறையில் நடத்துவதில், அடிக்கடி தாமதம் ஏற்படுகிறது. முடிவுகள் வெளியிடுதல், பணி நியமனம் உள்ளிட்டவற்றிலும் தாமதம் ஏற்படுகிறது. சில தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், தேர்வு எழுதியோ, எழுதாமலோ பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறு தேர்வுக்கு தயாரானவர்கள் பாதிக்கப்படாத வகையில், தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கான வயது வரம்பில், அதிகபட்சம் ஐந்தாண்டுகள் தளர்வு வழங்க, எஸ்.எஸ்.சி., ஆலோசித்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.