என்ன படிக்கலாம்?: வல்லுநர்கள் சொல்வது என்ன?
பிளஸ் 2 முடித்துவிட்டு அடுத்தகட்டம் நோக்கி நகரும் மாணவர்களுக்கு, உலகமே திறந்த புத்தகமாகக் காத்திருக்கிறது. மருத்துவத்தின் மகத்துவம், பொறியியலின் புதுமை, ஆடிட்டிங்கின் நுணுக்கம் மற்றும் ஆடை வடிவமைப்பின் பிரம்மாண்டம் எனப் பல துறைகளில் வாய்ப்புகள் கொட்டித் தீர்க்கின்றன. சரியான துறையைத் தேர்ந்தெடுத்து, தனித்திறனை வளர்த்துக் கொண்டால் வெற்றி என்பது நிச்சயம். மாணவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க, அந்தந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைகள் இதோ!தமிழ் இலக்கியம்; சாதனை சங்கமம்தமிழ் இலக்கியம் படித்தால் ஆசிரியர் பணிக்கு மட்டுமே செல்ல முடியும் என்பது தவறான எண்ணம். ஊடகத்துறையில் செய்தி ஆசிரியர், வாசிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. பதிப்பகத் துறையில் புத்தகப் பதிப்பாளர் பணியும், நவீனத் தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் மற்றும் மென்பொருள் சார்ந்த பணிகளிலும் வாய்ப்புகள் குவிந்துள்ளன. விளம்பரத் துறையில் 'காப்பி ரைட்டர்' எனப்படும் விளம்பர உரையாடல் எழுதுபவர்களுக்கு நல்ல தேவை இருக்கிறது. அரசுப் போட்டித் தேர்வுகளில் தமிழ்ப் பாடம் ஒரு மிகப்பெரிய பலம். அண்மையில் கூட முதுகலைத் தமிழ் பயின்றவர்களை அதிகாரிகள் நிலைக்கு அரசு உயர்த்தியுள்ளது.- விஜயராஜ், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்.மருத்துவப் படிப்பு; வாழ்வியல் தேவைஉலகில் பல துறைகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உச்சத்தைத் தொட்டுவிட்டுப் பின் வீழ்ச்சியடையலாம். ஆனால், மருத்துவத் துறையின் தேவை என்பது மனித இனம் இருக்கும் வரை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் சவாலாக உருவெடுக்கும் புதிய நோய்களையும், மருத்துவப் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளத் துடிப்பான மருத்துவர்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள். மருத்துவப் படிப்பு என்பது வெறும் பட்டம் மட்டுமல்ல; அது ஒரு ஆரோக்கியமான வாழ்வியல் பணி. நம் குடும்பத்தையும், நம்மைச் சார்ந்த சமூகத்தையும் இமைப்பொழுதும் காக்கும் அரணாக மருத்துவர் பணி அமைகிறது. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தையும், மனநிறைவையும் தரும் இத்துறை, என்றுமே அழிவில்லாத ஒரு உன்னதமான கல்வியாகும்.- டாக்டர் ஹரிஹராகுயன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.ஆங்கில அறிவு; உலகளாவிய மதிப்புஆங்கிலம் இன்று உலக மொழியாகவும், இணையத்தின் முதன்மை மொழியாகவும் திகழ்கிறது. ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவர்களுக்குத் தகவல் தொழில்நுட்பம், விளம்பரம், இதழியல், வலைப்பதிவு மற்றும் சமூக ஊடகத்துறைகளில் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. 'பிராம்ப்ட் இன்ஜினியர்', தொழில்நுட்ப எழுத்தாளர் போன்ற நவீன காலப் பணிகளுக்கு ஆங்கிலப் பட்டதாரிகள் அதிகம் தேவைப்படுகின்றனர். மேலாண்மைப் படிப்புகள் மற்றும் ஐ.ஏ.எஸ்., போன்ற உயரிய போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக இது ஒரு வலுவான அடித்தளமாக அமைகிறது.- டாக்டர் ஷோபா ராமசுவாமி, ஆங்கிலப் பேராசிரியர்.ஆடை வடிவமைப்பு; உலகை ஆளும் கலைஉணவு, உடை, உறையுள் ஆகிய மூன்றில் இன்று உணவை விடவும் ஆடைகளுக்கே மக்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால் ஆடை உற்பத்தி மற்றும் ஃபேஷன் டிசைனிங் துறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு உலகளாவிய அளவில் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. 'நிப்ட்-டீ' போன்ற கல்லூரிகளில் அப்பேரல் ஃபேஷன் டிசைனிங், ஃபேஷன் கம்யூனிகேஷன், நிட்வேர் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் மற்றும் பேஷன் ஸ்டைலிங் எனப் பல நவீனப் படிப்புகள் உள்ளன. டெல்லி, பெங்களூரு, சென்னை என இந்தியா முழுவதும் இதற்கான உயர்தரக் கல்வி நிறுவனங்கள் பெருகிவிட்டன. முழு ஈடுபாட்டோடும், தனித்திறனோடும் இத்துறையில் கால் பதிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.- பூபதி விஜய், பேஷன் டிசைனிங் உதவிப் பேராசிரியர்.செயற்கை நுண்ணறிவு - தரவு அறிவியல்'செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்' போன்ற புதிய பிரிவுகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதுடன், கைநிறைய ஊதியத்தையும் பெற்றுத் தருகின்றன. பொறியியல் படிப்பில் செய்முறைப் பயிற்சிகள் அதிகம் என்பதால், மாணவர்கள் எதையும் எளிதில் கற்றுக் கொண்டு சாதிக்க முடியும். இப்படிப்பை முடிப்பவர்களுக்கு என்.ஐ.டி., ஐ.ஐ.டி., போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பும், வெளிநாடுகளில் உயரிய பணிகளில் சேரும் வாய்ப்பும் மிக எளிதாகக் கிடைக்கிறது.- செல்வி, செயற்கை நுண்ணறிவுத்துறை பேராசிரியர்.கணினி அறிவியல்; நவீன நுழைவாயில்கணினி அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு மென்பொருள் உருவாக்குநர், செயற்கை நுண்ணறிவுப் பொறியாளர், தரவுப் பகுப்பாய்வாளர், இணையப் பாதுகாப்பு வல்லுநர் எனப் பல நவீனப் பணிகள் காத்திருக்கின்றன. வங்கிகள், மருத்துவம், கல்வி மற்றும் ஊடக நிறுவனங்களில் கணினி நிபுணர்களின் தேவை இன்றியமையாதது. கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களில் உயரிய வேலைகளைப் பெறலாம். சொந்தமாகத் தொழில் தொடங்குதல் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கும் இத்துறை ஒரு சிறந்த நுழைவாயில்.- டாக்டர் கதிரேசன், கணினி அறிவியல் பேராசிரியர்.சட்டம் பயின்றால் சாதிக்க வாய்ப்புஅரசு மற்றும் தனியார் துறைகளில் சட்டம் படித்து முடிப்பவர்களுக்கு இன்று சிறப்பான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. தொழில் வளர்ச்சி பெருகி வரும் சூழலில், அதனால் ஏற்படும் சட்டப் பிரச்சனைகள் மற்றும் சச்சரவுகளைத் தீர்க்க சட்ட ஆலோசகர்களின் தேவை மிக அதிகமாக உள்ளது. அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்களுக்கு வழிகாட்டியும் ஆலோசகர்கள் தேவைப்படுகின்றனர். இது மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் இத்துறை சார்ந்த பணி வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன. பட்டப்படிப்பை முடித்தவுடன் தனிப்பட்ட முறையில் வழக்கறிஞராகப் பணியாற்றி தற்சார்பு அடையலாம்.- முகமது ஜியாபுதீன், ஓய்வுபெற்ற மாவட்ட அமர்வு நீதிபதி.அறிவியல் உலகம்; விண் தொடும் வாய்ப்புஉயிரியல், இயற்பியல், வேதியியல் போன்ற அடிப்படை அறிவியல் படிப்புகளைத் தேர்ந்தெடுத்தால் உலகத்தரம் வாய்ந்த பணிகளை அடைய முடியும். இயற்பியல் மாணவர்கள் 'இஸ்ரோ' போன்ற நிறுவனங்களில் விஞ்ஞானிகளாகலாம். மைக்ரோ பயாலஜி (நுண்ணுயிரியல்) மற்றும் புட் டெக்னாலஜி (உணவுத் தொழில்நுட்பம்) துறைகள் இன்று அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளன. முதுகலை முடித்துத் தகுதித் தேர்வுகளில் (நெட் மற்றும் ஸ்லெட்) தேர்ச்சி பெற்றால் உதவிப் பேராசிரியராகப் பணியற்றலாம். முனைவர் பட்ட ஆராய்ச்சிகள் மூலம் அரசு உதவித்தொகையுடன் அறிவியல் உலகில் பெரிய சாதனைகளை நிகழ்த்தலாம்.- டாக்டர் மோகன்குமார், விலங்கியல் இணைப்பேராசிரியர்.அதிகரித்து வரும் ஆடிட்டர் தேவைவணிக உலகம் விரிவடைய விரிவடைய, ஆடிட்டர்களுக்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. பிளஸ் 2வில் எந்தப் பாடப்பிரிவை எடுத்திருந்த மாணவர்களும் இத்துறையில் சாதிக்க முடியும். முதலில் அடிப்படைத் தேர்வு, பிறகு இரண்டாம் நிலை (இன்டர்மீடியேட்), அதன்பின் ஒரு தணிக்கையாளர் அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகள் நேரடிப் பயிற்சி என முறையான உழைப்பைச் செலுத்தினால், ஆடிட்டராக உயரலாம். உறுதி மற்றும் விடாமுயற்சி இருந்தால், நீங்களும் ஒரு சிறந்த ஆடிட்டராகிப் பொருளாதாரத்தை வழி நடத்தலாம்.- தனஞ்செயன், ஆடிட்டர்.பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் சட்டத்துறைசட்டம் சார்ந்த படிப்புகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள 33 சதவீத இடஒதுக்கீடு காரணமாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்களுக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள் என அனைத்துத் துறைகளிலும் சட்ட ஆலோசகர் பணியிடங்கள் உள்ளன. அரசு வழக்கறிஞர் மற்றும் நீதிபதி போன்ற உயரிய பதவிகளுக்கான வாய்ப்புகளும் அதிகம். தற்சார்புடன் விளங்க விரும்புவோர் தனிப்பட்ட முறையில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கலாம்.- ராமசாமி, மூத்த வழக்கறிஞர், திருப்பூர்.