உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்காக ஆசிரியர்களிடம் வேண்டுகோள் வைத்த அமைச்சர்

திருப்போரூர்: கோவளத்தில் 43.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசுப்பள்ளி வகுப்பறை கட்டடத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று திறந்து வைத்தார்.திருப்போரூர் ஒன்றியம், கோவளம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை வசதி இல்லாததால், மாணவ, மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஓய்வறையும் இல்லை.இதையடுத்து எஸ்.டிஎஸ்., பவுண்டேஷன் வாயிலாக 43.78 லட்சம் ரூபாய் மதிப்பில், தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட இரண்டு வகுப்பறைகள் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. இந்த புதிய வகுப்பறைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று திறந்து வைத்தார்.அதன்பின் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:நமது செயல்பாடுகளை பேச்சில் இல்லாமல், செயலில் காட்ட வேண்டும். மாணவர்கள் போதையின் பாதையில் செல்லக்கூடாது. மாணவர்களுக்கான விளையாட்டு வகுப்பை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டாம். உங்களுக்கு வேண்டுகோளாக இதை கேட்டுக்கொள்கிறேன். மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும். பள்ளியில் மாணவர்களுக்கான கழிப்பறை மற்றும் வகுப்பறை கட்டுவது கோவில் கட்டுவதற்கு ஈடாகும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்வில் செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன், திருப்போரூர் த.வெ.க., எம்.எல்.ஏ., விஜயராஜ், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்