போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் விருப்பமுள்ள தேர்வர்கள் பங்கேற்க கலெக்டர் ஷரண்யா அறி அழைப்பு விடுத்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4ல்6,574 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு நவ. 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்தும் பிராந்திய கிராமப்புற வங்கி அலுவலர் I, II & III, அலுவலக உதவியாளர் - பல்நோக்கு ஆகிய தேர்வுகளுக்கு 13,745 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இவற்றிற்கு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலகம், இலவச வைபை வசதியுடன் கூடிய கணினி ஆய்வகம் அலுவலகத்தில் உள்ளது. விரும்புவோர் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக பதிவு செய்யலாம், என்றார்.