வேளாண் கல்லுாரி மாணவியர் விவசாயிகளுடன் களப்பயிற்சி
மோகனுார்: மோகனுார் ஒன்றியத்தில், தனியார் வேளாண் கல்லுாரி மாணவியர், ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ், பல்வேறு களப்பயிற்சிகள் மேற்கொண்டனர்.இதன் ஒரு பகுதியாக, செங்கப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில், வேளாண் உதவி இயக்குனர் ஹேமலதா தலைமையில், விவசாயிகளை சந்தித்து தென்னை, வாழை, மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களின் சாகுபடி முறைகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, சந்தைப்படுத்துதல் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தனர்.மேலும், ஹீல்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை பார்வையிட்டு, பெண்கள் மேம்பாடு மற்றும் சமூக வளர்ச்சி பணிகள் குறித்து அறிந்துகொண்டனர். பரளியில் கலெக்டர் மதுபாலன் தலைமையில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில், வேளாண், தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட அரசு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் விவசாயிகளுக்கான சேவைகளை பார்வையிட்டனர்.தொடர்ந்து, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, நவீன அரிசி ஆலை, கோழிப்பண்ணை, தென்னை நார் தொழிற்சாலை மற்றும் கோரைப்பாய் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை பார்வையிட்டு உற்பத்தி முறைகள், முதலீடு, லாபம் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து நேரடி அனுபவம் பெற்றனர். இப்பயிற்சிகள் மூலம் மாணவியர் வேளாண் தொழில்நுட்பங்கள், விவசாயிகளின் வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்முனைவோர் வாய்ப்புகள் குறித்த நடைமுறை அறிவை பெற்றனர்.