‘தற்போதைய கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும்’
சென்னை: “ஆசிரியர்கள் தற்போது கடைபிடிக்கும் கற்பித்தல் முறையை நிறுத்தி விட்டு, வகுப்பறையில் மாணவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும், கேள்வி கேட்கவும் வாய்ப்பளிக்கும் கற்பித்தல் முறையை கடைபிடிக்க வேண்டும்,” என தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தித் துறை செயலர் டேவிதார் தெரிவித்தார். அண்ணா பல்கலைக் கழக எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை சார்பில், ‘பவர் கன்ட்ரோல் அண்டு எம்பெடட் சிஸ்டம்ஸ்’ என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கம் நேற்று துவங்கியது. துணைவேந்தர் மன்னர் ஜவகர் தலைமையில் நடந்த விழாவில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தித் துறை செயலர் டேவிதார், கருத்தரங்கை துவக்கி வைத்தார். விழாவில் டேவிதார் பேசியதாவது: தமிழகத்தில் மின்தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, மின்தேவை 3,800 கோடி யூனிட்டாக இருந்தது. அது 2010ம் ஆண்டு மார்ச்சில் 7,000 கோடி யூனிட்டாக உயர்ந்துள்ளது. இந்த அளவிற்கு மின்தேவை உயரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஆண்டு இறுதியில், தமிழகத்தில் கூடுதலாக 3,000 - 4,000 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கும். வரும் 2012ம் ஆண்டில், தமிழக மின் தேவையும், உற்பத்தியும் சமன் செய்யப்படும். அதற்கு அடுத்த ஆண்டுகளில் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தகவல் தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தி, மின்சாரத்தை வீணாக்காமல் வினியோகிக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது. சென்னை உட்பட 110 நகரங்களில் இத்திட்டம் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். மொத்தம் 400 கோடி ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவது தொடர்பாக பல்கலைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். ஐ.டி., நிறுவனங்கள், 50 சதவீத கணினி மொழித் திறன் மட்டுமே எதிர்பார்க்கின்றன. அந்நிறுவனங்கள் மாணவர்களிடம் தங்களது கருத்தை வெளிப்படுத்தும் திறனையே அதிகம் எதிர்பார்க்கின்றன. மாணவர்கள் பள்ளியில் 12 ஆண்டு, கல்லூரியில் மூன்று - நான்கு ஆண்டுகள் என 16 ஆண்டுகளுக்கு மேல் படிக்கின்றனர். இருந்தாலும், அவர்களிடையே தங்களது கருத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் திறன் குறைவாக உள்ளது, கற்பித்தல் முறையில் உள்ள குறைபாடு. ஆசிரியர்கள் தற்போது கடைபிடிக்கும் கற்பித்தல் முறையில், ஆசிரியர்கள் மட்டுமே பேசுகின்றனர்; மாணவர்கள் பேசுவதில்லை. ஆசிரியர்கள் இந்த கற்பித்தல் முறையை நிறுத்த வேண்டும். வகுப்பறையில் மாணவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும், கேள்வி கேட்கவும் வாய்ப்பளிக்கும் கற்பித்தல் முறையை கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் மாணவர்களிடையே ஐ.டி., நிறுவனங்கள் எதிர்பார்க்கும் மென்திறன் வளரும். மாணவர்கள் தங்களது கருத்துக்களை மற்றவர்களிடம் தெளிவாக எடுத்துரைப்பர். இவ்வாறு டேவிதார் பேசினார்.