கல்வி நிறுவனங்கள் இனி வர்த்தக மையங்களா?
நாட்டின் கல்வி நிறுவனங்கள் என்பவை, லாப-நோக்கமற்ற நிறுவனங்களாக இருப்பதை தவிர்த்து, அவற்றில் தனியார் துறை பங்களிப்பை அதிகப்படுத்துவதோடு, உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி கட்டணங்களையும் அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்ற 2010-11 ஆண்டிற்கான அரையாண்டு ஆய்வறிக்கையின் பரிந்துரை, மக்களவையில் வைக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் தங்களை வருமான கேந்திரங்களாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் அதேவேளையில், அவைகளின் செயல்பாடுகள் மீதான கண்காணிப்பும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் மாணவர்கள், உயர்கல்வியை பெறும்பொருட்டு, அவர்களுக்கு நிதிஉதவி வழங்கும் அம்சமும் பரிந்துரையில் சேர்க்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கைவரை அடித்தட்டு மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கமிஷனை அமைப்பது உள்ளிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முயற்சியை பாராட்டுவதோடு, உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர்களின் தரம் பற்றியும் தனது கவலையை இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. நாட்டின் பல பல்கலைக்கழகங்கள், காலத்தின் சூழலுக்கேற்ப தங்களின் கல்வித்திட்ட நடைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். சில உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே தரமான கல்வியை வழங்கிவரும் வேளையில், பல கல்விநிறுவனங்கள் நவீன மாறுதல்களிலிருந்து அதிகம் விலகி நிற்கின்றன என்று அந்த ஆய்வு கவலை தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிக்கும் விஷயத்தில், சரியான கட்டுப்பாடுகளும் வரைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும். இந்திய கல்வி அமைப்பை வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த விட்டுவிடக்கூடாது என்று பரிந்துரைக்கும் அதேவேளையில், ஆராய்ச்சி துறைகளில் அந்த நிறுவனங்கள் அதிக முதலீடு செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிறது. கல்வி நிறுவனங்கள் லாப நோக்குடைய மையங்களாக செயல்படலாம் என்ற மத்திய அரசின் சிக்கல் வாய்ந்த, எதிர்காலத்தில் பல சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய பரிந்துரைகள், ஒருவேளை செயல்பாட்டிற்கு வந்தால், அவை முறையாக கண்காணிக்கப்படுமா? என்ற கவலை சமூக அக்கறையுள்ள பல கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.