உள்ளூர் செய்திகள்

‘ஆன்லைனில் கல்லூரிகள் பின்பற்றும் நற்பண்புகளின் விவரம்’

சென்னை: “மற்ற பொறியியல் கல்லூரிகளும் பின்பற்ற வசதியாக, கல்லூரிகளில் பின்பற்றப்படும் நற்பண்புகள் விவரத்தை பல்கலைக்கு தெரிவிக்க வேண்டும்,” என, பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கு சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார். சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தங்கராஜ், இணைப்பு கல்லூரிகளின் முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பல பொறியியல் கல்லூரிகள், கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயும், வளாகத்திற்கு வெளியேயும் சில தனித்துவம் வாய்ந்த நற்பண்புகளை பின்பற்றுகின்றன. ஒரு கல்லூரியில், ‘மாணவர்களும், ஆசிரியர்களும் உணவுப் பொருட்களை வீணாக்க கூடாது’ என்ற பண்பு பின்பற்றப்படுகிறது. இது மற்ற கல்லூரிகளும் பின்பற்றக்கூடிய ஒரு விஷயம். மேலும், சில கல்லூரிகளில் எரிசக்தியை சேமிக்கும் முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதேபோல, மற்ற கல்லூரிகளிலும் பல்வேறு நற்பண்புகள் பின்பற்றப்படுகின்றன. எனவே, அனைத்து கல்லூரி முதல்வர்களும், தங்களது கல்லூரிகளில் பின்பற்றப்படும் நற்பண்புகள் விவரத்தை, பல்கலைக்கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் அந்த நற்பண்புகளைப் பற்றி, மற்ற கல்லூரிகளுக்கு பின்பற்றுவதற்காக தெரிவிக்க முடியும். ஒரு துவக்கமாக, அனைத்து பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்களும், கல்லூரி வளாகத்திலும், வளாகத்திற்கு வெளியேயும் மாணவர்களும், ஆசிரியர்களும் உணவுப் பொருட்களை வீணாக்கக் கூடாது என்ற நற்பண்பை கடைபிடிக்க வேண்டும். கல்லூரிகளில் பின்பற்றப்படும் நற்பண்புகள் விவரம், சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு தங்கராஜ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்