உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் இறுதித் தேர்வான மெட்ரிக் கல்விமுறை

மதுரை: புதிய கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி முறை அமலாவதால், மெட்ரிக், ஆங்கிலோ இந்திய கல்விமுறையில் படிக்கும் மாணவர்களுக்கு இதுவே இறுதித் தேர்வாக அமைகிறது. வரும் மார்ச்சில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. புதிய கல்வி ஆண்டில் அறிமுகமாகும் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி., பாடத்திட்டங்களுக்கு மார்ச் பொதுத் தேர்வுதான் இறுதித் தேர்வு. அதன்பின் தனித்தேர்வராகத்தான் எழுத வாய்ப்பு கிடைக்கும். மாநில பாடத்திட்டத்தில் 9 லட்சம் பேர் தேர்வு எழுதுவர். மெட்ரிக் திட்டத்தில் ஒரு லட்சம் பேர் எழுதுவர். மெட்ரிக் பாடத்திட்டத்தில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் தோல்வி அடைவர். இதேபோல ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் தேர்வு முறைகளிலும் குறைந்த அளவில் தோல்வி அடைவர். சமச்சீர் கல்வி அமலாக உள்ளதால், வரும் பொதுத் தேர்வில் தோல்வி அடைவோருக்கு அடுத்து என்ன வாய்ப்பு என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து விசாரித்தபோது, ‘பொதுவாகவே புதிய முறை அமலாகும்போது, இருமுறை தாங்கள் படித்த பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுத வாய்ப்பு தரப்படும். மார்ச் தேர்வில் தோல்வி அடைவோருக்கு, அதைத் தொடர்ந்து வரும் அக்டோபர், பின்வரும் மார்ச் தேர்வுகளில் வாய்ப்பு கிடைக்கும், அதன் பின்னும் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை எனில், அடுத்த கட்டமாக புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத வேண்டியிருக்கும்.” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்