உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பயிற்சி

திருநெல்வேலி: விளையாட்டில் ஆர்வமுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு நெல்லை பல்கலைக்கழகத்தில் இலவச பயிற்சியளிக்கப்படும் என துணைவேந்தர் சபாபதிமோகன் தெரிவித்தார். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் சார்பில் நெல்லை கவுசானல்புரம் கிறிஸ்துஜோதி பள்ளியில் ஊரக விளையாட்டு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து நெல்லை பல்கலை., துணைவேந்தர் சபாபதிமோகன் பேசியதாவது: விளையாட்டுகளில் சிறந்துவிளங்கும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குகிறது. எனவே கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களை அவர்களுக்கு ஆர்வமுள்ள விளையாட்டுக்களில் பயிற்சியளித்தால் அவர்கள் சிறப்பாக பரிணமிப்பார்கள். இதற்காக நெல்லை பல்கலைக்கழகம் ஒரு பயிற்சி திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அரசு மற்றும் மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவர்களை தேர்ந்தெடுத்து நெல்லை பல்கலை., வளாகத்தில் செமஸ்டர் விடுமுறை காலங்களில் ஒரு செமஸ்டர் காலத்தில் 15 நாட்கள் வீதம் பயிற்சியளிக்க உள்ளோம். இவ்வாறு ஆண்டுக்கு இரண்டு முறை பயிற்சி அளிக்க உள்ளோம். மாணவர்களுக்கான உடை, உணவு, தங்குமிடம் ஆகிய அனைத்துசெலவுகளையும் பல்கலை.,யே ஏற்றுக்கொள்ளும். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி என மூன்று மாவட்டங்களில் இருந்து 150 மாணவர்களுக்கு பயிற்சியளிக்க உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்