சுதந்திர தினத்தில் பங்கேற்க மாணவர்கள் பீதி!
திருநெல்வேலி: நெல்லையில் சுதந்திர தினத்தில், மாணவர்களை பங்கேற்க வைப்பது தொடர்பாக பெற்றோரைச் சந்தித்து பேச போலீசார் முடிவு செய்துள்ளனர். நெல்லை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆக.,15ல் வெடிகுண்டுகள் வைக்க திட்டமிட்டது தொடர்பாக, பயங்கரவாதிகள் ஷேக்அப்துல் கபூர், செய்யது காசிம் என்ற ஹீரா, அலிஅப்துல்லா கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் 4வது நாளாக ஆகஸ்ட் 4ம் தேதி நெல்லை போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து, கமிஷனர் மஞ்சுநாத் கூறுகையில், மூன்று பயங்கரவாதிகளிடமும் நடத்தப்பட்டு வரும் விசாரணை, நல்லமுறையில் நடக்கிறது. நெல்லையில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளோம். பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. லாட்ஜ்களில் சந்தேகமளிக்கும் வகையில் தங்கியிருப்பவர்கள், தெருவில் அனாதையாக கிடக்கும் சூட்கேஸ்கள், பைகள், நீண்டநாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் கார் போன்றவை குறித்து தகவல் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளோம். சுதந்திர தின விழா நடக்கும் வ.உ.சி., மைதானம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ, மாணவியர்கள் வழக்கம் போல சுதந்திர தின விழாவில் பங்கேற்கலாம். இதுதொடர்பாக, பள்ளிகள் தோறும் சென்று விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த உள்ளோம். பெற்றோரையும் அழைத்துபேச உள்ளோம். பயங்கரவாதி தவ்பீக்கை தேடி பல இடங்களுக்கும் போலீஸ் குழுக்கள் சென்றுள்ளன. கேரளாவில் பிடிபட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து எந்த தகவலும் இல்லை என்றார்.