உள்ளூர் செய்திகள்

போலீஸ் அகடமியில் எஸ்.ஐ.,க்களுக்கு பயிற்சி துவக்கம்

வண்டலூர்: தமிழ்நாடு காவல்துறைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 232 பெண் எஸ்.ஐ.,க்கள் உட்பட ஆயிரத்து 95 எஸ்.ஐ.,க்களுக்கான, ஓராண்டு பயிற்சி வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி போலீஸ் அகடமியில் நேற்று துவங்கியது. சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 810 தாலுகா போலீஸ் எஸ்.ஐ.,க்கள், 161 ஆயுதப்படை எஸ்.ஐ.,க்கள், 124 தமிழ்நாடு சிறப்பு காவல்படை எஸ்.ஐ.,க்கள் உட்பட மொத்தம் ஆயிரத்து 95 எஸ்.ஐ.,க்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், 810 தாலுகா போலீஸ் எஸ்.ஐ.,க்களுக்கு, நேற்று முதல் வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி போலீஸ் அகடமியிலும், மற்றவர்களுக்கு சென்னை, அசோக்நகரில் உள்ள, காவல் பயிற்சி கல்லூரியிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. வழக்கமான சட்ட பாடங்களுடன் கிரிமினாலஜி, மனித ஒழுக்கம், குற்ற நிகழ்வு விசாரணை, யோகா, கராத்தே, ஸ்கேட்டிங், ஆயுதங்களை பயன்படுத்தும் முறை, நீச்சல், தியானம், துப்பாக்கி சுடும் பயிற்சி, ஜங்கிள் பயிற்சி உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படும். போலீஸ் அகடமியில் நடந்த, இதற்கான துவக்க விழாவில் ஏ.டி.ஜி.பி., அனூப்ஜெய்ஸ்வால், போலீஸ் அகடமி ஐ.ஜி., துரைராஜ், எஸ்.பி., மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்