உள்ளூர் செய்திகள்

மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு

இந்த 2011-2012 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் 28-02-11(திங்கள்) அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கல்விக்கான ஒதுக்கீட்டில் 24% அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கல்விக்கென்று ரூ.52,057 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கல்வி உரிமை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 40% அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வ சிக்ஸா அபியான் திட்டத்திற்கு கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட ரூ.15 ஆயிரம் கோடியிலிருந்து 40% அதிகரிக்கப்பட்டு இந்தாண்டு ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர மேலும் பல ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் கல்வி சம்பந்தமாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை, * உயர்நிலைக் கல்வியின்போது தொழில் பயிற்சி அளிக்கும் திட்டம் இந்தாண்டில்(2011-12) செயல்பாட்டிற்கு வரும். இதன்மூலம் ஏராளமான இளைய தலைமுறையினர் வேலைவாய்ப்பை பெறும் நிலைக்கு வருவர். * 9 மற்றும் 10 ம் வகுப்பில் படிக்கும் எஸ்.சி/எஸ்.டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இதற்கு முன்பாக 10 ம் வகுப்பை தாண்டிய எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கே உதவித்தொகை வழங்குவதில் முன்னுரிமை இருந்தது. * தேசிய அறிவு இணைப்பு(நேஷனல் நாலேஜ் நெட்வொர்க்) திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலுமுள்ள 1500 உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்களை இணைக்கும் செயல்பாட்டில் இந்தாண்டு மார்ச் மாதம் வரை 190 மையங்கள் இணைக்கப்படும். மீதமுள்ள மையங்கள் 2012 மார்ச் மாதம் இணைக்கப்படும். * வரும் 2022 ம் ஆண்டிற்கு 2 ஆண்டுகள் முன்னதாகவே 15 கோடி திறன்மிகு தொழிலாளர்களை உருவாக்கும் தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சிலின்(என்.எஸ்.டி.சி) திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக ரூ.658 கோடி மதிப்பில் 26 திட்டங்களுக்கு என்.சி.டி.சி. ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டங்களின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடிக்கும் மேற்பட்ட திறன்மிகு தொழிலாளர்களை உருவாக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் திறன் மேம்பாட்டு பயிற்சியானது 20 ஆயிரம் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 75% பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அடுத்த வருடத்தின்போது தேசிய திறன் மேம்பாட்டு திட்ட நிதிக்கு ரூ.500 கோடி வழங்கப்படும். * மேலும் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்திலும், கேரளா மாநிலம் மலப்புரத்திலும் அமைய உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகங்களுக்கு தலா ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தடவை ஒதுக்கீடாக கேரளா கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * கொல்கத்தா மற்றும் அலகாபாத் ஆகிய நகரங்களில் அமைய உள்ள வார்தாவின் மகாத்மா காந்தி அந்தராஷ்திரியா ஹிந்தி விஸ்வ வித்யாலயாவின் 2 மையங்களுக்கு தலா ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * ஒரு தடவை ஒதுக்கீடாக காரக்பூர்-ஐ.ஐ.டி -க்கு ரூ.200 கோடி ஒதுக்கப்படுகிறது. மேலும் மவுலானா ஆசாத் கல்வி பவுண்டேஷனுக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்படுகிறது. * ஐ.ஐ.எம்-கொல்கத்தா தனது நிதி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆய்வகத்தை அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி மற்றும் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனங்களுக்கு தலா ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்