குழந்தை தொழிலை ஒழிக்க தெரு நாடகம்
திருப்பூர்: குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு தெரு நாடகம், வளர்கல்வி திட்டம், தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் சார்பில் விஜயாபுரத்தில் நடந்தது. திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பனியன் கம்பெனிகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனரா என அதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு செய்கின்றனர். சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது, திருப்பூர் பகுதிகளில் அதிகமாக நடப்பதால், பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தெருநாடகங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. கிராமப்பகுதிகளில் இதுபோன்ற விழிப்புணர்வு நாடகங்கள் நடத்த உதவியாக, இப்பணி வளர்கல்வி திட்ட பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல்கட்டமாக. விஜயாபுரத்தில் தெரு நாடகம் ஆகஸ்ட் 11ம் தேதி நடந்தது. குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் எதிர்கால பாதிப்பு, படிப்பறிவின் முக்கியத்துவம், பெற்றோருக்கு அறிவுரை வழங்குதல் உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த வகையில், தெருநாடகம் நடத்தப்பட்டது. தொட்டிய மண்ணரை ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர்., நகரில் 12ம் தேதி தெரு நாடகங்கள் நடத்தப்படுகிறது.