கல்லூரிகளே பட்டம் வழங்கும் புது முயற்சி
இன்றைய மாணவர்கள் எந்தக் கல்லூரியில் பட்டப் படிப்பைப் படித்தாலும், தேர்வுகளை நடத்தி அதன் பின்னர் பட்டத்தை பல்கலைக் கழகங்களே வழங்குகின்றன. பெருகி வரும் இன்றைய மக்கள் தொகை மற்றும் படிப்பறிவின் காரணமாக பல்கலைக் கழகங்கள் பட்டத்தை வழங்குவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றுக்கு நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் ஒரு சிறந்த மாற்றாகும் என்ற கருத்து பரவலாக நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட மத்திய பரிசீலனைக் குழுமம் இந்தியாவில் இயங்கும் பல்வேறு நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் அவ்வாறு இயங்குவதற்கான தகுதியற்றவை என்று தீர்ப்பளித்தது. இந்த நிலையில் மத்திய மனித வள அமைச்சகம் சில தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகள் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு தாமே தேர்வு நடத்தி பட்டத்தையும் வழங்க ஏதுவாக ஒரு புது முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக யூ.ஜி.சி., சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வரவும், சட்ட பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வருவதற்குமான பூர்வாங்க முயற்சிகளில் மத்திய மனித வள அமைச்சகம் இறங்கியுள்ளது. மத்திய மனித வள அமைச்சகத்தின் இந்த முடிவை முன்னாள் யு.ஜி.சி., தலைவர் திரு.யஷ்பால் உள்ளிட்ட பல்வேறு அறிஞர்களும் வரவேற்றுள்ளனர். இந்தியாவின் புகழ்பெற்ற கல்வியாளரான திரு.என்.ஆர்.மாதவ மேனன் தலைமையில் இதற்காக அமைக்கப்பட்ட பரிசீலனைக் குழு இந்தியாவிலுள்ள பிரசித்தி பெற்ற கல்லூரி களில் உடனடியாக இந்த முறையை அறிமுகப்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ளது. மும்பையிலுள்ள செயிண்ட் சேவியர் கல்லூரியில் இந்த முறை ஏற்கெனவே நடை முறைப்படுத்தப் பட்டு வருகிறது. தற்போது கொண்டுவரப்படும் இந்த மாற்றத்தினால் புது டில்லியிலுள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி, கோல்கட்டாவிலுள்ள செயிண்ட் சேவியர் கல்லூரி போன்றவை உடனடியாகப் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மனித வள அமைச்சகம் கொண்டு வர உள்ள இந்த மாற்றத்தின் மூலம் இனி இள நிலைப் பட்டத்தைக் கல்லூரிகளும், முது நிலைப் பட்டத்தை ஆராய்ச்சி நிறுவனங்களும் வழங்க ஏதுவாக இருக்கும். மத்திய மனித வள அமைச்சகத்தின் கல்லூரிகளே பட்டத்தை வழங்கும் முடிவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பிய வண்ணம் இருக்கின்றன. நிகர் நிலைப் பல்கலைக் கழக விஷயத்தில் ஏற்பட்ட நிலைதான் இதிலும் ஏற்படும் என்று எதிர்ப்பாளர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இந்த முடிவின் எதிர்காலம் எப்படி என்பது காலத்தின் கைகளில்தான் இருக்கிறது.