பள்ளிக் கல்வி செயலாளரின் அறிவிப்பு தன்னிச்சையானது
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா தன்னிச்சையாக கூறியிருக்கிறார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா, சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிளஸ் 2 தேர்வு முடிவு மே 14ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 25ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். பொதுவாக, தேர்வுத் துறைதான் அனைத்து பணிகளையும் செய்யும், பணிகள் முடிந்துவிட்டது என்று அரசுக்கு தெரிவித்த பிறகுதான், தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி இறுதி செய்யப்படும். இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா முன்கூட்டியே தேதியை வெளியிட்டது, தேர்வுத் துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு இது குறித்து பேசுகையில், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை வெளியிட்டுள்ளார். பொதுவாக பணிகள் முடிந்ததும் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தேதிகள் முடிவு செய்யப்பட்டு தமிழக முதல்வர் தான் தேதியை அறிவிப்பார். இதுதான் நடைமுறை. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தேர்வு முடிவு வெளியாகும் தேதியை அறிவித்துள்ளார். இது அவரின் சொந்த கருத்து தன்னிச்சையாக வெளியிட்டுள்ளார். இதுபோன்ற கொள்கை முடிவுகளை வெளியிடும் போது அ மைச்சர் மற்றும் முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகே வெளியிட வேண்டும். அதனால் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி முதல்வருடன் ஆரோசித்து பின்னர் வெளியிடப்படும். இதற்கும் தேர்தல் ஆணையத்துக்கும் தொடர்பு இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.