திருப்பூரில் இன்று தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி
பிளஸ் 2 முடித்த பின், என்ன படிப்பது, எங்கு படிப்பது, என்பது தொடர்பாக மாணவ, மாணவியருக்கு ஏற்படும் சந்தேகத்தை நிவர்த்தி செய்து, குழப்பத்தை போக்க, தினமலர் சார்பில் திருப்பூரில் இன்றும், நாளையும் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இன்று காலை 10.30 மணியளவில் டாக்டர். டி.வி. கோபால் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஒவ்வொரு துறையிலும் உள்ள வல்லுனர்கள், உயர் கல்வியை தேர்வு செய்வது தொடர்பாக கருத்துரை வழங்கி வருகின்றனர். உயர் கல்வியை தேர்வு செய்ய மாணவர்களுக்கு வழிகாட்டியாய், உற்ற நண்பனாய், ஆண்டுதோறும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, சந்தேகங்களை நிவர்த்தி செய்து, உயர் கல்வி கற்று பயனடைந்தோர் ஏராளம். இவ்வாண்டு எஸ்.ஆர்.எம்., பல்கலையுடன் இணைந்து, திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் இன்றும், நாளையும் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அனுமதி இலவசம்; பங்கேற்கும் அனைத்து மாணவ - மாணவியருக்கும், எந்த கல்லூரியில் என்ன படிப்பு உள்ளது என்பது தொடர்பான வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஒரே கூரையின் கீழ் அரங்குகள் அமைத்துள்ளன. அப்ளி கேசன் தேவைப்படுவோர் வாங்கிக் கொள்ளலாம்; அரங்க வளாகத்திலேயே அட்மிஷனும் போடலாம். கல்லூரிகளை பற்றிய சந்தேகங்களையும், நீங்கள் தேடும் கோர்ஸ் எந்த கல்லூரியில் உள்ளது என்பதையும் நேரடியாக ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம். இது தவிர, இன்றும், நாளையும் துறை சார்ந்த வல்லுனர்கள் கருத்துரை வழங்குகின்றனர். இன்று காலை 10.00 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது; 10.00 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை கருத்தரங்கு நடைபெறுகிறது. எதிர் காலத்தில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகள் குறித்து கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு ஆலோசனை வழங்குகிறார். கம்ப்யூட்டர், ஐ.டி., துறையின் தற்போதைய போக்குகள் குறித்து விரிவாக விளக்குகிறார், டி.சி.எஸ்., நிறுவனத்தை சேர்ந்த கணேஷ் மகாதேவன். சி.ஏ., - ஏ.சி.எஸ்., - ஐ.சி. டபிள்யூ.ஏ., படிப்புகள் பற்றி பிரபல ஆடிட்டர் சேகர் பேசுகிறார். வங்கி கடன் பெறுவது தொடர்பாக ஸ்டேட் பாங்க் உயர் அதிகாரி விருத்தாசலம் விளக்கம் அளிக்கிறார். 60 சதவீதம் முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெறுபவர்களுக்கான வழிகாட்டுதலை வழங்குகிறார் கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா; வெளிநாடுகளுக்கு சென்று படிப்பது குறித்து வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வரும் பால் செல்லக்குமார் பேசுகிறார். பயோடெக் மற்றும் பயோ இன்ஜி., குறித்து எஸ்.ஆர்.எம்., பல்கலை பேராசிரியர் வஹிதா ஹோப்பர் வழிகாட்டுகிறார். கம்யூ., சயின்ஸ் துறையின் எதிர்காலம் பற்றி எஸ்.ஆர்.எம்., பல்கலை விரிவுரையாளர் வடிவு மற்றும் ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கு உள்ள ஏராளமான வாய்ப்புகள் பற்றி விளக்கம் தருகிறார் எஸ்.ஆர்.எம்., பல்கலை விரிவுரையாளர் சுஜாதா. மொழிகள் கற்றால் எதிர்காலம் என்ற தலைப்பில் நகைச்சுவை பேச்சாளர் ஞானசம்பந்தம் பேசுகிறார்.