உள்ளூர் செய்திகள்

புதுவை அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை: 3ம் கட்ட கலந்தாய்வு 26ல் துவக்கம்

புதுச்சேரி: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான 3ம் கட்ட கலந்தாய்வு, 26ம் தேதி துவங்குகிறது. புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 1 சேர்க்கைக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மீதமுள்ள இடங்களை நிரப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பிளஸ் 1 வகுப்பில் சேராத மாணவர்கள், மதிப்பெண் அடிப்படையில், கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கலந்தாய்வில் நேரடியாக கலந்து கொண்டு இடம் பெற்றுக் கொள்ளலாம். வரும் 26ம் தேதி காலை 9:30 மணிக்கு துவங்கும் கலந்தாய்வில், 300 முதல் 499 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களும், மதியம் 2:00 மணிக்கு, 201 முதல் 299 மதிப்பெண் வரை பெற்ற மாணவர்கள் கலந்து கொள்ளலாம். 27ம் தேதி காலை 9:30 மணிக்கு 175 முதல் 200 மதிப்பெண் வரை பெற்ற மாணவர்களும், அன்று மதியம் 2:00 மணிக்கு புதுச்சேரி மாநில குடியுரிமை இல்லாத மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்விற்கு, மாணவர்கள் அசல் மற்றும் அவற்றின் நகல் சான்றிதழ் மற்றும் பெற்றோருடன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்