மின் வசதியில்லாத கிளை நுாலகம் 12 ஆண்டுகளாக தொடரும் அவலம்
திருத்தணி: திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சியில், சரஸ்வதிநகர் பகுதியில் தனியார் நுால் ஆலைக்கு சொந்தமான கட்டடத்தில், கடந்த 1969ம் ஆண்டு முதல் கிளை நுாலகம் இயங்கி வருகிறது.இந்த நுாலகத்தில் தினசரி நாளிதழ்கள், போட்டி தேர்வுக்கான பாட புத்தகங்கள், சிறுகதைகள், விவசாயம், சட்டம் உட்பட பல்வேறு துறை புத்தகங்கள் என, மொத்தம் 30,000 புத்தகங்கள் உள்ளன.இந்த நுாலகத்திற்கு தனியார் ஆலையில் இருந்து மின்வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், தனியார் ஆலை மூடப்பட்டது. மேலும், நுாலகத்திற்கு மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டது.அதன்பின் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும், கட்டடமும் பழுதடைந்துள்ளதால், மழை பெய்யும் போது மழைநீர் ஒழுகுகிறது. மின்சாரம் இல்லாததால் வாசகர்கள் நுாலகத்திற்கு வருவதில் ஆர்வம் காட்டுவதில்லை.இதனால், 30,000 புத்தகங்கள் வீணாகி வருவதுடன், அதை பராமரிக்க போதிய இடவசதியும் இல்லை. இந்த நுாலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும், மின் இணைப்பு பெறவும் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்காமல், மெத்தனம் காட்டி வருகிறது.இதுகுறித்து மாவட்ட நுாலக உயரதிகாரி கூறியதாவது:கிளை நுாலகத்திற்கு மின் வசதி மற்றும் கட்டடம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஊராட்சியில் வேறு இடத்தில் புதிதாக நுாலக கட்டடம் கட்டித்தர வேண்டும் என, கிராம சபையில், ஐந்துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளோம்.ஆனால், ஊராட்சி நிர்வாகம் தீர்மானத்தை நிறைவேற்றி, மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என, தெரிய வந்துள்ளது. புதிய நுாலகம் கட்டுவதற்கு போதிய இடத்தை, தனியார் ஆலை நிர்வாகம் ஒதுக்கீடு செய்து தருவதாக ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. விரைவில் நுாலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டி, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.