உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் போலீஸ் எழுத்து தேர்வு: 1.23 லட்சம் பேர் எழுதினர்

காலை 10 மணிக்கு துவங்கி, 80 நிமிடங்கள் தேர்வு நடந்தது. முதல் பகுதியில் பொது அறிவுக்கான 50 வினாக்களும், இரண்டாவது பகுதியில் உளவியல் தொடர்பான 30 வினாக்களும் கேட்கப்பட்டிருந்தன. மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. தமிழகம் முழுவதும் 31 மையங்களில் நடந்த தேர்வில், ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேர் பங்கேற்றனர். சென்னை மையத்தில் ஒன்பது இடங்களில் நடந்த தேர்வில், எட்டாயிரத்து 800 பேர் பங்கேற்றனர். கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  3,230 பேர் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத்தேர்வு எழுதினர். தமிழ்நாடு காவல்துறையில் சில மாதங்களுக்கு முன், இரண்டாம் நிலை காவலர் முதல்கட்ட தேர்வு நடந்தது. இதில் பங்கேற்ற பல ஆயிரம் பேரில், கோவை ரூரல் மற்றும் மாநகர் பகுதியில் இருந்து 3180 ஆண்களும், 510 பெண்களும் எழுத்துத் தேர்வில் பங்கேற்ற தகுதி பெற்றனர். கோவை கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் எழுத்துத்தேர்வு நடந்தது. இத்தேர்வில் அழைப்பிதழ் அனுப்பியும் 460 பேர் பங்கேற்கவில்லை.  போலீஸ் கமிஷனர்  மஹாலி, எஸ்.பி.,கார்த்திகேயன் ஆகியோர் இத்தேர்வின் கண்காணிப்பாளர்களாக பணியாற்றினர். எழுத்துத் தேர்விற்கு 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னை மையத்தில் தேர்வு எழுதிய ஒருவர் கூறுகையில், “பொது அறிவுக்கான வினாக்கள் ரொம்பவும் எளிமையாக இல்லை. உளவியல் தொடர்பான கேள்விகள் மிகவும் கஷ்டமாக இருந்தன,” என்று கூறினார். தமிழக அளவில் நடந்த தேர்வுகளை, சீருடைப் பணியாளர் டி.ஜி.பி., பாலச்சந்திரன், கூடுதல் டி.ஜி.பி., ராஜேந்திரன் ஆகியோர்   பார்வையிட்டனர். இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வில் நீளம், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உட்பட உடற்கூறு தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு முன் எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நடைமுறையை மாற்றி, முதலில் எழுத்துத் தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்கள் உடற்கூறு தேர்வுக்கு இந்த முறை அழைக்கப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்