தொழில்கள் துவங்க அரசு மானியத்தொகை 15 ல் இருந்து 25 சதவீதமாக உயர்வு
சிவகங்கை: "வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டத்தின் கீழ், தொழில்கள் துவங்க அரசு மானிய தொகை, 15 ல் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக" சிவகங்கை மாவட்ட தொழில் மைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில், சமுதாயம் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பின் தங்கிய படித்த வேலையற்ற இளைஞர்கள் உற்பத்தி, சேவை, வியாபாரம் போன்ற பிரிவுகளில் அரசு மானியத்துடன் வங்கிகளில் கடன் பெற்று, சுய தொழில்கள் தொடங்கி பிறருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் நோக்கில், மாவட்ட தொழில் மையம் மூலம், யு.ஒய். இ.ஜி.பி., திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில், தொழில் துவங்க 8ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்ட மதிப்பீட்டு தொகையில், ஏற்கனவே அரசு மானியமாக 15 சதவீதம் வரை வழங்கப்பட்டது. இதை 25 சதவீதமாக அதிகரித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, "வேலையற்ற இளைஞர்கள் தொழில் துவங்க விரும்பினால், சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்" என்றனர்.