தனியார் பள்ளிகளுக்கு தடை: மே 16க்கு முன் அட்மிஷன் கூடாது
தனியார் பள்ளிகள் சில, ஆண்டு தோறும் நவம்பரிலேயே மாணவர் சேர்க்கை நடத்தி, கட்டண வசூலை முடித்து விடுவதாக புகார் உள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகளில் கட்டண வசூலை ஒழுங்குப்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட்டு, 2010-11 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனால், மிரண்டு போயுள்ள பள்ளி நிர்வாகங்கள், அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை வழக் கத்தை ட முன்னதாகவே நடத்தி கட்டண வசூலில் ஈடுபட்டுள்ளன. இதை தடுக்க, மே மாதத்துக்கு பிறகே அட்மிஷன் நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விளக்க, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கூட்டம், கோவை பாரதி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இக்கூட்டத்தில், கோவை, நீலகிரி மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் இளங்கோ பேசியதாவது: பொதுவாக பள்ளிகளில் மே, ஜூன் மாதங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும். சில மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் நவம்பர் முதல் மார்ச் மாதத்துக்குள் அட்மிஷனை முடித்து, அனைத்து கட்டணங்களையும் வசூலித்து விடுவதாக புகார் வந்துள்ளது. பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பிளஸ்1 சேர்க் கையை ஜனவரி மாதமே முடித்து கட்டணம் வசூலித்து விடுகின்றன; இது தவறான நடைமுறை. இதை ஒழுங்குப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், சில நடைமுறைகளை கண்டிப் பாக பின்பற்ற வேண்டும். வகுப்பு வாரியாக சேர்க்கை நடத்தப்படும் மாணவர்களின் எண்ணிக்கை விபரத்தை, பள்ளி தகவல் பலகையில் மே இரண்டாம் வாரத்தில் வெளியிட வேண்டும். பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை பொறுத்தவரை, குரூப் வாரியாகவும், பயிற்றுமொழி (மீடியம்) வாரியாகவும் இடங்களின் எண்ணிக் கையை தெரிவிக்க வேண்டும். எல்.கே.ஜி., முதல் 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மே மாதம் 16ல் துவங்கி, மே 30க்குள் நடத்தலாம். மே 16க்கு முன் நடத்தப்படும் அட்மிஷன் முறையானதாக கருதப்பட மாட்டாது. மாணவர் சேர்க்கை தொடர்பாக மாணவர்களுக்கோ, பெற்றோருக்கோ நுழைவுத் தேர்வோ, நேர்முகத் தேர்வோ நடத்தக் கூடாது. அட்மிஷன் விண்ணப்ப படிவம் கேட்கும் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இது பற்றி பதிவேடும் பராமரிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு முன் பணிகளான பதிவு செய்வது, விண்ணப்பம் வழங்குவது போன்றவற்றை மே முதல் தேதி முதல் 15 வரை நடத்தலாம். பிளஸ்1 வகுப்புக்கான சேர்க்கை 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான 15 நாட்களுக்குள் நடக்க வேண்டும். அதற்கு முன் நடத்தப்படும் அட்மிஷன் தவறானதாக கருதப்படும். ஜூலை 31க்குப் பின் நடைபெறும் சிறப்பு சேர்க்கைகள், அரசு அனுமதிக்கும் காலம் வரை மேற்கொள்ளலாம்.ஒரு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து, தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ்1 வகுப்பு சேர்க்கையின் போது அதே பள்ளியில் முன்னுரிமை அளிக்க வேண்டும். எக்காரணத்தாலும் சேர்க்கை மறுக்கக் கூடாது. மாணவர் சேர்க்கையில், உள்ளூர் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய இனங்களுக்குரிய பிரதிநிதித்துவம் வழங்குவதில் நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்ற வேண்டும். எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு அனுமதி அல்லது அங்கீகாரம் வழங்க வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், அந்த வகுப்புகளுக்கு தனியாக சேர்க்கை, நீக்கல் பதிவேடு பராமரிக்க வேண்டும்.அட்மிஷன் முடிந்தவுடன் வகுப் பு வாரியாக சேர்க்கை அளிக்கப்பட்டவர்களின் பட்டியலுடன், சேர்க்கை விண்ணப்பங்கள், சேர்க்கை நீக்கல் பதிவேடு ஆகிய ஆவணங்களை மெட்ரிக் பள்ளி ஆய்வாளருக்கு அனுப்பி கையொப்பம் பெற வேண்டும். 1 முதல் 10ம் வகுப்புகள் மற்றும் பிளஸ் 1, பிளஸ்12 வகுப்புகளுக்கு தனித்தனியாக சேர்க்கை நீக்கல் பதிவேடு பராமரிக்க வேண்டும். இவ்வாறு, இளங்கோ பேசினார். இக்கூட்டத்தில், ஏராளமான தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் இளங்கோ கூறுகையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள உத்தரவை, பள்ளி முதல்வர்களுக்கு தெரிவித்துள்ளேன். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பின்பற்றப்படுகிறதா என்பது நேரில் ஆய்வு செய்யப்படும் என்றார்.