செமஸ்டர் தேர்வில் ஆள் மாறாட்டம்; 2 மாணவியர் கைது
கோவை: கோவை அரசு சட்டக்கல்லூரியில் நவ., 7ம் தேதி நடந்த செமஸ்டர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த இரு மாணவியர் கைது செய்யப்பட்டனர். உடுமலையைச் சேர்ந்தவர் அப்துல்காதர். இவரது மகள் சரிதா பானு (21); கோவை அரசு சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது இவருக்கு செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது. 7ம் தேதி நடந்த தேர்வில் இவருக்குப் பதிலாக, மற்றொரு மாணவி தேர்வெழுதியதை, தேர்வறை கண்காணிப்பாளர் கண்டுபிடித்தார். அந்த மாணவியை விசாரித்த போது, வடவள்ளி பெரியார் நகரைச் சேர்ந்த முருகன் என்பவரது மகள் ஐஸ்வர்யா; கோவையில் உள்ள மற்றொரு கல்லூரியில் பி.சி.ஏ., படித்து வருகிறார் என்பது தெரியவந்தது. மாணவி சரிதா பானுவும், ஐஸ்வர்யாவும் தோழிகள். விபரீதம் தெரியாமல், சரிதா பானுவுக்குப்பதிலாக தேர்வெழுத ஐஸ்வர்யா ஒப்புக் கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. கல்லூரி முதல்வர் லட்சுமி, கண்காணிப்பாளர் ராமசாமி, மாணவியர் ஆள் மாறாட்டம் செய்தது பற்றி வடவள்ளி போலீசில் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், இரு மாணவியரையும் கைது செய்தனர்.