இரண்டு கட்டமாக நடைபெறும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் முதல் தேதி முதல் நடக்கிறது. முன்னதாக, பிப்ரவரி 4ம் தேதி முதல் 24ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடக்கின்றன. சென்னையில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுத இருப்பதால், ஒரு நாள் முன்னதாக பிப். 3ம் தேதியில் இருந்தே தேர்வு துவங்குகிறது. இது தொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து, அனைத்துப் பள்ளிகளுக்கும் அதிகாரப்பூர்வமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக செய்முறைத் தேர்வுகள் நடக்கின்றன. பிப். 3 முதல் 8ம் தேதி வரை ஒரு கட்டமாகவும், 9ம் தேதியில் இருந்து 16ம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் தேர்வுகள் நடக்கின்றன. செய்முறைத் தேர்வு அட்டவணையை, அந்தந்த பள்ளிகள் ஏற்கனவே இறுதி செய்து, முதன்மைக் கல்வி அலுவலகத் திற்கு அனுப்பி ஒப்புதல் பெற் றுள்ளன. அதன்படி, சம்பந்தபட்ட பள்ளிகளுக்கு தேதி வாரியாக முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து கேள்வித்தாள்கள் அனுப்பி வைக்கப்படும். பிளஸ் 2 மாணவர்களுக்கு மொத்தமுள்ள 200 மதிப்பெண்களில், 150 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வுக்கும் (தியரி), மீதமுள்ள 50 மதிப்பெண்கள் செய் முறைத் தேர்வுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 50 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெறும். இதில், செய்முறைக்கு 30 மதிப்பெண்களும், ‘இன்டர்னலுக்கு’ 20 மதிப்பெண்களும் என பிரிக்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வின்போது, தேர்வுக்கான 30 மதிப்பெண்களை, வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தான் போடுவர். செய்முறைத் தேர்வு கொண்ட பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு, 50க்கு குறைந்தபட்சம் 40 மதிப்பெண்களும், 150 மதிப்பெண்கள் கொண்ட எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 30 மதிப்பெண் களும் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செய்முறை மற்றும் எழுத்து தேர்வுகளில், ஒன்றில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாவிட்டால், ‘மாணவர் தேர்ச்சி பெறவில்லை’ என கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.