ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு 2ம் தாள் 3,620 பேர் பிரசன்ட்; 153 பேர் ஆப்சென்ட்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வின், இரண்டாம் தாளை, 14 மையங்களில் 3,620 பேர் எழுதினர். 153 தேர்வர்கள் கலந்துகொள்ளவில்லை.தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், தற்போது பணியில் இருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவை, உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 2025 செப்., மாதத்திலிருந்து, இரண்டு ஆண்டுக்குள் ஆசிரியர்கள் தேர்வின் மூலம் உரிய தகுதியை பெற வேண் டும் என அறிவுறுத்தி உள்ளது.அதன்படி, தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித்தேர்வு தாள் - 1, நேற்று முன்தினம் நடந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு இரண்டாம் தாள் தேர்வு, 14 மையங்களில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க, 3,773 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான நுழைவுச்சீட்டும் வழங்கப்பட்டிருந்தது. இத்தேர்வில் முறைகேட்டை தவிர்க்க ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. தேர்வர்கள் கடும் சோதனைக்கு பிறகே மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அறை கண்காணிப்பாளர்களாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 360 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தேர்வில், 3,620 பேர் மட்டுமே பங்கேற்றனர். 153 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. தேர்வு மையங்களை சுற்றிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.