உள்ளூர் செய்திகள்

கோவை அண்ணா பல்கலை கல்லூரிகளில் 2010க்குள் ‘ஆன்-லைன் தேர்வு’

கோவை: கோவை அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லூரிகளில் 2010ம் ஆண்டுக்குள், ‘ஆன்-லைன் தேர்வு’ முறை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவை அண்ணா பல்கலையின் கீழ், எட்டு மாவட்டங்களில் 101 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகள் அனைத்தையும், ‘விர்சுவல் பிரைவேட் நெட்வொர்க்’ (வி.பி.என்.,) மூலம் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, தேர்வு மேலாண்மை முறை (இ.எம்.எஸ்.,) என்ற திட்டத்தை பல்கலை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இத்திட்டம் பெங்களூருவைச் சேர்ந்த, ‘மைன்ட்லாஜிக்ஸ் இன்போ டெக்’ நிறுவனத்தின் உதவியுடன்  செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த, இன்ஜினியரிங்  கல்லூரிகளில் ஆயிரம் சதுர அடியில் இடம் ஒதுக்கி, உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என, பல்கலை அறிவுறுத்தியுள்ளது. ‘ஒவ்வொரு கல்லூரியில் ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். அவரைப் பற்றிய முழுத் தகவலையும், பல்கலை தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். இ.எம்.எஸ்., முறையை அமல்படுத்துவதில் உள்ள சந்தேகங்களை தீர்க்க, இம்மாத இறுதியில் அனைத்து கல்லூரிகளுக்கான கூட்டத்தை பல்கலை ஏற்பாடு செய்யும்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தேர்வு மேலாண்மை முறையின் கீழ், அந்தந்த கல்லூரிகளில் அமைக்கப்படவுள்ள தேர்வு தகவல் மையத்தில், மாணவர்களுக்கு ஹால் டிக்கெட், வினாத்தாள் ஆகியவை பிரின்ட் செய்து கொடுக்கப்படும். நெட்வொர்க் ஆபரேஷன் சென்டரில் தேர்வு முடிவுகள், மதிப்பெண் பட்டியல் அச்சிட்டு வழங்கப்படும். இரண்டாவது கட்டமாக மாணவர் வருகைப்பதிவு, தேர்வுப் பதிவு, கல்வி நிறுவன தகவல், அகமதிப்பீடு மதிப்பெண் முறை, எலக்ட்ரானிக் வினாத்தாள் வங்கி, ஆன்-லைன் தேர்வு ஆகியவை கண்காணிக்கப்படும். கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “வரும் 2010ம் ஆண்டுக்குள், இணைப்பு கல்லூரிகள் அனைத்திலும், ஆன்-லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்