மேட்டூர் போலீஸ் பயிற்சி பள்ளி; 3 ஆண்டுகளுக்கு பிறகு நிதி ஒதுக்கீடு
சேலம்: அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்ட சேலம், மேட்டூர் போலீஸ் பயிற்சிப் பள்ளி திட்டத்திற்கு மூன்றரை ஆண்டுகள் கழித்து இப்போது தான் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். உத்தரவு: அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சென்னை, ஆவடி, சேலம், மதுரை, விழுப்புரம் ஆகிய நான்கு இடங்களில் இயங்கி வந்த தற்காலிக போலீஸ் பயிற்சிப் பள்ளிகளை, நிரந்தர பயிற்சிப் பள்ளிகளாக தரம் உயர்த்தி உத்தரவிட்டது. வேலூர், தூத்துக்குடி, கோவை, திருச்சி ஆகிய நான்கு நிரந்தர பயிற்சிப்பள்ளிகள் சேர்ந்து, அதன் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது. இது தவிர, இன்னும் 29 தற்காலிக போலீஸ் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தரம் உயர்த்தப்பட்ட மதுரை, விழுப்புரம் போலீஸ் பயிற்சிப் பள்ளிகளுக்கு, போதிய இடம், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது. நீண்ட இழுபறிக்குப் பின், தற்போது, சேலம் போலீஸ் பயிற்சிப் பள்ளிக்கு, மேட்டூர் அடுத்த, குள்ளவீரன்பட்டி கிராமத்தில், 55.8 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, காவலர் வீட்டு வசதி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரூ.12 கோடி: கட்டுமானத்தின் ஒட்டு மொத்த செலவு, 150 கோடி ரூபாய். இதில், முதல் கட்டமாக 12.61 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரியில், கட்டுமான பணி துவங்கும் என போலீசார் தெரிவித்தனர். ஆட்சிக்கு வந்ததும் அறிவித்த திட்டத்திற்கு இப்போது தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே, இத்திட்டம் எப்போது முடியுமோ என, போலீசார் கவலை அடைந்துள்ளனர். நீச்சல் குளத்துடன் வசதி: தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என, கட்டுமானம் நடக்க உள்ளது. * இதில், வழக்கமான அதிகாரிகள் அறைகளுடன், துப்பாக்கி ஆயுத கிடங்கு, பயிற்சி போலீசார் ஓய்வறை, நூலகம், பொழுதுபோக்கு அறை என, சகல வசதிகளும் இடம்பெறுகின்றன. * ஒரே நேரத்தில், 500 பேர் பயிற்சி பெறலாம். * நீச்சல் குள வசதியும் உண்டு.