உள்ளூர் செய்திகள்

இலவச கட்டாய கல்வி: ஜூலை, 5 முதல் விண்ணப்பிக்கலாம்

2021-22ம் கல்வியாண்டுக்கு இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, நுழைவு வகுப்பில் (எல்.கே.ஜி., அல்லது முதலாம் வகுப்பு), 25 சதவீத இடஒதுக்கீடின்படி சேர்க்கை வழங்கவேண்டும். கோவையிலுள்ள பள்ளிகளில் விண்ணப்பிக்கும் பெற்றோர், தங்களின் வீடுகளுக்கு அருகே, ஒரு கி.மீ., தொலைவிலுள்ள பள்ளிகளில், எது நுழைவு நிலையோ அவ்வகுப்புகளுக்கு, rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும், ஜூலை, 5 முதல் ஆக., 3ம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டால் பெற்றோருக்கு ஒப்புகைச்சீட்டு கட்டாயம் வழங்கவேண்டும். இவ்விண்ணப்பங்களை அப்பள்ளியிலேயே இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம். தவிர, முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகங்களில் விண்ணப்பங்களை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை காட்டிலும் அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும். விண்ணப்பிக்கும்போது, ஒரு புகைப்படம், பிறப்பு சான்றிதழ், இருப்பிடம், வருமானம், முன்னுரிமைக்கான உரிய அதிகாரிகளிடம் இருந்து பெறப்படும் சான்றுகள், ஜாதி சான்றிதழ்களை இணைத்து அனுப்பவேண்டும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்