நெட் தேர்வு வினாத்தாள் ரூ.5,000: சமூக ஊடகங்களில் கூவி விற்ற அவலம்
புதுடில்லி: யு.ஜி.சி., நெட் தேர்வுக்கான வினாத்தாள், 'டார்க் நெட்' வாயிலாக வெளியானதாகவும், டெலிகிராம் தகவல் பரிமாற்ற ஊடகம் வாயிலாக, 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.கல்லுாரி உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான தேசிய தகுதித் தேர்வான, யு.ஜி.சி., நெட் தேர்வுகளை என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.நாடு முழுதும் கடந்த 18ம் தேதி நடந்த யு.ஜி.சி., நெட் தேர்வுக்கு 11 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். தேர்வு முடிந்த மறுநாளான 19ம் தேதி, தேர்வுக்கு முன் வினாத்தாள் வெளியான விபரம் தெரியவந்தது. இது தொடர்பான, லிங்க்குகள், சமூக ஊடக தகவல் பரிமாற்றங்கள், ஸ்கிரீன்ஷாட்களை மத்திய சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றை, மத்திய கல்வி அமைச்சகத்தில் அவர்கள் சமர்ப்பித்தனர்.தேர்வு வினாத்தாளும், முன்னதாக வெளியான வினாத்தாளும் ஒத்துப்போவதை கல்வி அமைச்சகம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து நடந்து முடிந்த யு.ஜி.சி., நெட் தேர்வை, தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது.இந்நிலையில், தேர்வுக்கு 48 மணி நேரம் முன்னதாக, 'டார்க் வெப்'பில் வினாத்தாள் வெளியானதாகவும், சில சமூக ஊடகக் குழுக்களில் வினாத்தாள் 6 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் சி.பி.ஐ., தரப்பு தெரிவிக்கிறது. அதோடு, வினாத்தாள் விற்பனையின் மையப்புள்ளியாக, டெலிகிராம் தகவல் பரிமாற்ற செயலி பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த செயலியில் உருவாக்கப்பட்ட பல புதிய குழுக்கள் வாயிலாக, தேர்வுக்கு முந்தைய நாளில் வினாத்தாள் 10,000 முதல் 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக, வினாத்தாள் வடிவமைத்த குழுவினர், நெட் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கும் பயிற்சி மையங்களிலும் சி.பி.ஐ., விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பல்வேறு பல்கலை வளாகங்களிலும் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.'வாட்ஸாப், டெலிகிராம்' செயலிகளில் 5,000 ரூபாய்க்கு வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டது குறித்து, தேர்வுக்கு சில நாட்கள் முன்பாகவே நாங்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, லக்னோ பல்கலை மாணவர்கள் தெரிவித்தனர்.ஏற்கனவே இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'நெட்' தேர்வு விவகாரம் மத்திய அரசுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.